உலகம்

“உறக்கத்தில் கத்திய சிறுவன்” - சொன்ன விஷயங்களால் அதிர்ந்துபோன பெற்றோர் : ‘முற்பிறவி’ என்பது உண்மையா?

ஜேம்ஸ் லெய்னிங்கர் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஒரு போர் விமானியின் மறுபிறவி என ப்ரூஸ் நம்பினார்.

“உறக்கத்தில் கத்திய சிறுவன்” - சொன்ன விஷயங்களால் அதிர்ந்துபோன பெற்றோர் : ‘முற்பிறவி’ என்பது உண்மையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உலகின் பல மூலைகளில் பலவித முற்பிறவி சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன.

ஜேம்ஸ் லெய்னிங்கரும் அப்படித்தான். இரவுப்பொழுதுகளில் கெட்ட கனவுகளை கண்டது போல் தூக்கத்தில் கத்துவான். இரண்டு வயதுதான் ஆகிறது. தூக்கத்தில் இருக்கும்போது திடுமென கை கால்களை உதறி ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு பெட்டியை உடைத்துக்கொண்டு வெளிவரும் முயற்சியில் இருப்பது போல் ஜேம்ஸ் கத்துவான் என்கின்றனர் அவனது பெற்றோர். உதறிக் கொள்வதைத் தாண்டி அதிர்ச்சி தந்த விஷயம் அவன் கத்திய விஷயங்கள்தான்.

‘விமானம் பற்றி எரிகிறது. சிறிய மனிதனால் வெளியே வர முடியவில்லை.’

ஜேம்ஸ் லெய்னிங்கரின் தந்தை ப்ரூஸுக்கு மகனுக்கு என்ன நேர்கிறது என தெரியவில்லை. மகன் சொல்லும் பெயர்களையும் வார்த்தைகளையும் கொண்டு ப்ரூஸ் மூன்று வருடங்களுக்கு ஆய்வு செய்தார். இறுதியில் அவர் கண்டுபிடித்த விஷங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தன.

முற்பிறவி நினைவு!

கிறித்துவ குடும்பமான ப்ரூஸ்ஸின் குடும்பத்தில் முற்பிறவிக்கான நம்பிக்கை கூட கிடையாது. ஆனாலும் கிடைத்த தகவல்கள் ப்ரூஸ்ஸை முற்பிறவியை நம்புவதை நோக்கி தள்ளியது. ஜேம்ஸ் லெய்னிங்கர் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஒரு போர் விமானியின் மறுபிறவி என ப்ரூஸ் நம்பினார். இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட போர்விமானியின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதில் மாட்டிய விமானி தப்பிக்க முயன்று, இறுதியில் முயற்சிகள் பலனளிக்காமல் இறந்து போனதாகவும் சொல்கிறார் ப்ரூஸ்.

தெற்கு லூசியானாவில் வாழ்ந்த ஜேம்ஸ் தூக்கத்தில் கத்த துவங்கியது மே மாதம் 1ஆம் தேதி, 2000மாம் ஆண்டிலிருந்துதான். ஜேம்ஸ்ஸின் தாய்தான் முதலில் அவன் கத்துவதை கேட்டு எழுந்தவர். ஒரு வாரத்தில் ஐந்து முறையாவது கெட்ட கனவுகள் ஜேம்ஸ்ஸுக்கு வந்து விடுகின்றன. குழந்தையான ஜேம்ஸ் லெய்னிங்கர் அதிகம் விரும்புவது விமான பொம்மைகளைதான். அதிலும் போர் விமானத்தின் பகுதிகளை கூட தெளிவாக விளக்கி விடுகிறான் ஜேம்ஸ். தூக்கத்தில் அவன் குறிப்பிடும் ‘சிறிய மனிதன்’ யார் என்ற கேள்விக்கு ‘நான்தான்’ எனக் குறிப்பிட்டிருக்கிறான் அவன். அதைச் சார்ந்து அவனை விசாரிக்கையில் அவனும் அதே சம்பவங்களையே குறிப்பிடுகிறான்.

தூக்கத்தில் மகன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு ஆராய்ந்து கொண்டிருந்த ப்ரூஸ்ஸுக்கு ஆச்சரியம். நாடோமா என்கிற ஒரு போர்க்கப்பல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக தன் தந்தைக்கு ப்ரூஸ் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார். இவோ ஜிமாவில் நடந்த போரை பற்றிய புத்தகம். ஜேம்ஸ் அந்த போரில்தான் தன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறினான். அதிர்ந்த ப்ரூஸ் அதைப் பற்றிய தகவலை சென்று ஆராய்கையில் அதுவும் உண்மையாக இருந்தது.

உறக்கத்தின்போது சிலரின் பெயர்களை ஜேம்ஸ் கூறியிருக்கிறான். அதில் ஒரு பெயர் ஜேக் லார்சன். அது யாரென கேட்கையில் அவரும் ஒரு விமானிதான் என பதிலளித்தான் ஜேம்ஸ். முற்பிறவி என்றெல்லாம் நம்பத் தொடங்கியிருக்கும் மனைவியின் எண்ணம் தவறு என்பதை உறுதி செய்ய ப்ரூஸ் மீண்டும் ஒரு முயற்சி எடுத்தார்.

நாடோமாவில் நடந்த போரில் கலந்து கொண்ட போர் வீரர்கள் அச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஒன்றுகூட இருந்தனர். ஒரு புத்தகம் எழுதவிருப்பதாகச் சொல்லி அந்த ஒன்றுகூடலில் ப்ரூஸ்ஸும் கலந்து கொண்டார். ஜேக் லார்சனை ஒருவழியாக அவர் கண்டுபிடித்தார். ஒரு பெரும் ரகசியம் வெளிப்பட்டது. லார்சனின் நெருங்கிய நண்பர் ஒருவர் இரண்டாம் உலகப் போரின் போது விமானியாக இருந்திருக்கிறார். அவர் போர்விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது எஞ்சினில் சுடப்பட்டு விமானத்தில் தீ பற்றியிருக்கிறது. அதில் விமானம் வீழ்ந்து அவர் இறந்து போயிருக்கிறார். விமானியின் பெயர் ஜேம்ஸ் ஹூஸ்டன் ஜூனியர்.

ப்ரூஸ்ஸுக்கு அதிர்ச்சி. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. தன் மகன் சொல்வதற்கும் மனைவி நம்புவதற்கும் பின் உண்மை இல்லை என காண்பிக்கும் முயற்சிகளை அவர் விடுவதாக இல்லை. நாடோமா போரில் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை தேடி கண்டடைந்தார். அதில் அந்த பெயர் இடம்பெற்றிருந்தது. ஜேம்ஸ் ஹூஸ்டன் ஜூனியர்!

ப்ரூஸ்ஸால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒருநாள் ஜேம்ஸ் ப்ரூஸ்ஸிடம் சொன்னான், “நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள் என தெரியும். அதனால்தான் உங்களை தேர்ந்தெடுத்தேன்” என்றான். தடுமாறிய ப்ரூஸ் எங்கே எங்களை கண்டுபிடித்தாய் எனக் கேட்டார். முற்பிறவி பெற்றோரின் ஐந்தாவது திருமண நாளன்று கண்டுபிடித்ததாக சொன்னான். அந்த திருமண நாள் இப்பிறவி தாயான ஆண்ட்ரியா கருத்தரிப்பதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பு.

வேறு வழியிருக்கவில்லை. ப்ரூஸ்ஸும் முற்பிறவியை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

முற்பிறவி என்பது உண்மையாக இருக்க முடியுமா?

பிற உயிர்களிலிருந்து மனித உயிர் வேறுபட்டது. பிற உயிர்களுக்கு இயக்கவென இயற்கை தேவைப்படுகிறது. மனிதனை இயக்கவென சமூகம் தேவைப்படுகிறது. மனிதனை இயக்கும் சமூகம் தகவல்களால் கட்டப்பட்டது. பல வித தகவல்கள் சமூகத்தில் உண்டு. குடும்பம், அரசு, அறிவியல், மதம், ஆன்மீகம் என்கிற பலவகை கருத்துகள், சமூகம் தொன்றுதொட்டு புழங்கும் தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய தகவல்களை கையாள்வது எப்படி என தெரிந்து கொண்டதில்தான் பிற விலங்குகளிலிருந்து மனிதன் வேறுபடுகிறான்.

அந்தத் தகவல்கள் பல நேரம் நல்லவிதத்தில் மனிதனுக்கு பயன்பட்டாலும் சில நேரங்களில் தவறாகவும் பயன்பட்டுவிடுகிறது, முற்பிறவி நம்பிக்கை போல!

banner

Related Stories

Related Stories