உலகம்

கனவு.. போராட்டம்.. நம்பிக்கை - புதிய வரலாற்றை எழுதிய கேப்ரியல் போரிக்!

இடதுசாரிகள் மீண்டும் ஒரு நாட்டைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

கனவு.. போராட்டம்.. நம்பிக்கை - புதிய வரலாற்றை எழுதிய கேப்ரியல் போரிக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“மக்கள் எல்லாவாற்றிற்கும் போராட்டம் எனச் சென்றால், நாடு சுடுகாடாகிவிடும்” என மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் வலதுசாரிகள் பலரும் பேசுவதைக் கேட்டிருப்போம். அப்படி ஒரு சிறிய கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட போராட்டம் இன்று ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது.

போராட்டங்கள் மூலமே நாடுகள் பல தங்கள் விடுதலையைச் சாத்தியமாகியது என்பது வரலாற்று உண்மை. அப்படி ஒரு போராட்டம் மூலம் இடதுசாரிகள் மீண்டும் ஒரு நாட்டைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

உலகிலேயே இளம் அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கேப்ரியல் போரிக். சிலி நாட்டின் அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். நீளமாக முடியும், தாடியும் வளர்த்துக் கொண்டு கையில் டாட்டூ போட்டுக்கொண்டு இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தபடியே உருவான ஒரு மாணவர் இயக்கத் தலைவர்தான் கேப்ரியல் போரிக்.

அதிபர்கள் என்றவுடன் கோட், சூட், டை அணிந்த மேல்தட்டு மக்களின் பிரதிநிதியாக காட்சி தரும் பல அதிபர்களை பார்த்து பழகிய மக்கள், வீதியில் இறங்கி போராடி, அதுவும் டாட்டூ என முறையாக அலங்கரித்துக் கொள்ளாத இளைஞரை இன்று அதிபராக்கி இருக்கிறார்கள் சிலி மக்கள்.

தென் அமெரிக்காவில் வலிமையான பொருளாதாரத்தை பெற்றிருந்த நாடாக சிலி இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் ஏழ்மைமிக்க நாடாக ஆனது. அதற்கு வலதுசாரி பொருளாதாரக் கொள்கை மிக முக்கியமான ஒரு காரணி.

சிலி என்றால், சமத்துவமின்மை அதிகம் நிலவும் தேசங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. வெறும் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் கையில், நாட்டில் 25 சதவீத மக்களின் சொத்துகள் குவிந்து கிடந்துள்ளது. ஆட்சியாளர்களை வைத்து அந்த பெரும் பணக்காரர்களே ஆட்சியை தீர்மானித்தனர்.

நாட்டில் பெருநிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்சலுக்கை அளிக்கப்பட்டது. ஆனால் அதேவேளையில், தினக்கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை அதிகமாக்கின. இந்த பாகுபாடு ஏழைகளுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தது. இந்த துயரங்களைப் போக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வேலையை அங்குள்ள இடதுசாரிகள் தொடர்ச்சியாகச் செய்து வந்தனர்.

கனவு.. போராட்டம்.. நம்பிக்கை - புதிய வரலாற்றை எழுதிய கேப்ரியல் போரிக்!

தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவதாக அத்தியாவசிய பொருட்களுக்கு வரியைக் குறைவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிராக போராட்டமாக அது மூண்டது. அந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக போராடிய 29 பேர் சுட்டும், அடித்தும் கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது.

இந்தக் கொடூரம் சிலி மக்களுக்கு வலதுசாரி அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. அதன்தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களால் சர்வாதிகாரி என அழைக்கப்பட்ட பினோசெட் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனப் போராடினார்கள்.

இந்தப் போராட்டத்திற்குப் பணிந்த அரசு, பேச்சுவார்த்தையில், 155 பேர் கொண்ட அரசியல் சட்ட நிர்ணய சபையை உருவாக்குவது என முடிவு செய்தது. இந்தச் சபைக்கு இந்தாண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில், சுயேச்சைகளும் இடதுசாரி தலைவர்களும் பெரும்பாலான இடங்களில் வென்றனர். அந்த பெரும்பான்மையாகக் கொண்ட சுயேச்சைகள் கொண்ட புதிய சபையே, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது.

இந்தச் சூழலில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து கேப்ரியல் போரிக்கை வேட்பாளராக களம் இறக்கின. கேப்ரியல், சிலியின் தலையெழுத்தை இளைஞர்கள் மாற்றுவார்கள் என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்தார்.

தேர்தல் வாக்குறுதியாக எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பென்ஷன் திட்டத்தை சீரமைப்பது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, பெரிய நிறுவனங்களுக்கு தகுந்த வரி, சூழலியலுக்கு ஏற்ப பசுமைப் பொருளாதார திட்டம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை அடைந்த மக்கள், சர்வாதிகாரி பினோசெட்டின் ஆட்சியே நாட்டின் பாதுகாப்பு எனக் கூறிய வலதுசாரிக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் வாக்குறுதியை நிராகரித்துவிட்டனர்.

இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில், “இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு நீதி கிடைப்பது போலவே இனி ஏழைகளுக்கும் நீதி கிடைக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான விலையை இனி ஏழைகள் கொடுக்க வேண்டி இருக்காது. அனைவரின் உரிமையும் மதிக்கப்படும்” என முழங்கினார் கேப்ரியல் போரிக். பின்னர் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொன்னார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபராக இருந்து சொன்னார். அதிபர் கேப்ரியல் போரிக் வெற்றியை உலகம் கொண்டாடுகிறது.

banner

Related Stories

Related Stories