உலகம்

எகிப்து நாட்டின் சே குவேரா ‘மினா டேனியல்’ பற்றி தெரியுமா? - ஒரு போராளியின் நெகிழ்ச்சிக் கதை!

ஏழைகள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே மினாவின் அரசியலாக இருந்தது.

எகிப்து நாட்டின் சே குவேரா ‘மினா டேனியல்’ பற்றி தெரியுமா? - ஒரு போராளியின் நெகிழ்ச்சிக் கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

2011ஆம் ஆண்டு எகிப்து நாடு குலுங்கியது. அரபு புரட்சி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த மக்கள் எழுச்சி ஆட்சியிலிருந்த முபாரக்கை பதவி விலகச் செய்தது. எகிப்தில் சிறுபான்மையினராக இருந்தவர்கள் கிறிஸ்துவர்கள். முபாரக் ஆட்சி முழுக்க அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டது. கிறிஸ்துவர்களின் வாழ்விடங்கள் எகிப்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே இருந்தன. வறுமை அவர்களின் வாழ்க்கைகளைப் பிடித்து ஆட்டியது. அவர்கள் மத்தியில் இருந்தவர்தான் மினா டேனியல். அவரிடம் எகிப்து சமூகத்தை மாற்ற பல கருத்துகள் இருந்தன. க்யூப புரட்சியாளர் சே குவேராவை உதாரணமாக மினா பின்பற்றினார். சே குவேராவின் தோற்றம் தொடங்கி உடைகள் வரை அவர் பின்பற்றினார். இடதுசாரிய தத்துவத்துடன் அவருக்கு அணுக்கம் இருந்தது. எகிப்து நாட்டின் அரசியலை பற்றி மினாவின் கருத்து என்ன தெரியுமா?

”எகிப்து நாட்டு மக்கள் கால்பந்து போல. இஸ்லாமிய பெரும்பான்மை மற்றும் தாராளவாதிகள் ஆகியோருக்கு இடையே தொடர்ந்து உதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்பதே மினாவின் கருத்தாக இருந்தது.

தனக்கான விடுதலை கேட்டு மட்டும் மினா போராடவில்லை. எகிப்து நாட்டின் ஏழை மக்கள் அனைவருக்கும் பயன்படும் தீர்வை நோக்கியே அவரின் பயணம் இருந்தது. ஏழைகள் வாழும் பகுதிகளுக்கே நண்பர்களை அதிகம் போகச் சொல்வார் மினா. அந்த மக்களிடம் உரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கேட்டறிய வேண்டும் என்பதே மினாவின் நோக்கமாக இருந்தது. எகிப்தில் இருந்த அரசியல் அமைப்புகளில் மினாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. எகிப்து நாட்டின் விடுதலைக்கான போர் எகிப்து நாட்டு ஏழைகளிடம் இருந்தே தொடங்குமென நினைத்தார். ஏழைகள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே மினாவின் அரசியலாக இருந்தது. 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் மினா டேனியலும் பங்கெடுத்தார்.

எகிப்து நாட்டின் சே குவேரா ‘மினா டேனியல்’ பற்றி தெரியுமா? - ஒரு போராளியின் நெகிழ்ச்சிக் கதை!

மினாவைப் பொறுத்தவரை எகிப்திய கிறிஸ்துவர்களின் பிரச்சினை மதம் சார்ந்த பிரச்சினை கிடையாது. மாறாக அது எகிப்து நாட்டில் நிலவும் பெரும் பிரச்சினையின் ஒரு பகுதிதான் என்பது அவரின் நிலைப்பாடு. எகிப்தில் முன்நிறுத்தப்பட்ட மதரீதியான பிரச்சினைக்கு பதிலாக மினாவிடம் ஒரு கேள்வி இருந்தது.

”மத ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்போது அவை ஏன் எப்போதும் ஏழைகள் இருக்கும் இடத்திலேயே ஏற்படுகின்றன? எகிப்தில் இருக்கும் பணக்கார பகுதிகளில் ஏன் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மோதிக் கொள்வதில்லை?”

கிறிஸ்துவர்கள் மட்டும் ஒன்றிணையும் போராட்டங்களை மினா டேனியல் வெறுத்தார். சிலுவைகள் சுமந்து கொண்டு கிறித்துவ பாடல்கள் பாடும் போராட்டங்கள் இஸ்லாமியர்களை இன்னும் அதிகமாக தள்ளி வைக்கும் என்றார். ஒற்றுமையில்தான் வெற்றி சாத்தியம் என நம்பினார். கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு மோதல் ஏற்பட்டபோது இருதரப்பினரிடமும் மினா சென்று பேசினார்:

“ஏன் இரு தரப்பும் சண்டை போடுகிறீர்கள்? இஸ்லாமியர்களும் சரி கிறிஸ்துவர்களும் சரி ஏழ்மையில்தான் இருக்கின்றனர். இரு தரப்புக்கும் நல்ல வீடுகள் கிடையாது. இரு தரப்புமே சிக்கலில்தான் இருக்கிறீர்கள். பின் இரு தரப்புக்குள்ளும் ஏன் சண்டை?” எனக் கேட்டிருக்கிறார் மினா. இறுதியில் மோதிக் கொண்டிருந்த இரு தரப்பும் ஒன்று சேர்ந்தது. அரசை எதிர்த்தது.

மினாவின் போராட்டக் குணமும் தைரியமும் அரசியல் தெளிவும் 2011ஆம் ஆண்டு தஹ்ரீர் சதுக்கப் போராட்டத்தில் வெளிப்பட்டது. காவலர்களுடன் நேரேதிர் நின்று போராடியிருக்கிறார். விளைவாக பலமுறை காயம்பட்டிருக்கிறார். அவருடைய காலில் தோட்டா பாய்ந்திருக்கிறது. உடல் முழுக்க பல காயங்களை ஏற்படுத்திய போராட்டம் அது.

முபாரக் பதவி விலகிய பிறகு, ராணுவம் அதிகாரம் எடுத்த சில நாட்களில் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்த போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இராணுவத்தின் அழிச்சாட்டியத்தில் தொய்வடைந்தவர்களுக்கு உத்வேகம் அளித்தவர் மினா டேனியல்தான். இராணுவம் தேர்தல்களை நடத்தவேண்டும் என முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலும் மினா கலந்து கொண்டார்.

எகிப்து நாட்டின் சே குவேரா ‘மினா டேனியல்’ பற்றி தெரியுமா? - ஒரு போராளியின் நெகிழ்ச்சிக் கதை!

2011 அக்டோபர் 9.

கிறிஸ்துவப் பழங்குடிகள் தொடர்ந்து அரசால் தாக்கப்படுவதை எதிர்த்து அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மத்திய கெய்ரோவிலிருந்து ஊர்வலம் தொடங்கவிருந்தது. மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். நிறைய செயற்பாட்டாளர்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் கூட போராட்டத்தில் கலந்துகொண்டனர். மினாவும் அந்தப் போராட்டத்தில் இருந்தார். திடுமென கற்கள் எறியப்பட்டன. ஊர்வலத்தில் குழப்பம் உண்டாக்கப்பட்டது.

குழப்பத்தையும் மீறி ஊர்வலம் நகர்ந்தது. தீர்மானிக்கப்பட்ட இடத்தை அடையும் நிலையில் இராணுவம் கூட்டத்துக்குள் புகுந்தது. வன்முறையைக் கட்டவிழ்த்தது. போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இராணுவ வாகனங்கள் போராட்டக்காரர்கள் மீது ஏறி இறங்கின. முபாரக் காலத்தில் கூட கண்டிராத கொடூரம் நடந்து கொண்டிருந்தது. அருகே இருந்த மருத்துவமனை பிணங்களாலும் காயம்பட்டோராலும் நிரம்பியது. காவலர்களின் துப்பாக்கிகள் ஓயவில்லை. தோட்டாக்கள் எட்டுத் திக்கும் பறந்தன. ஒரு தோட்டா மினாவுக்குள் பாய்ந்தது, சுருண்டு விழுந்தார் மினா டேனியல்.

தோட்டா, மினாவின் உயிரை குடித்திருந்தது. இறந்தபோது மினாவின் வயது 20. சே குவேராவை போன்ற லட்சியம் கொண்டிருந்தவனின் உயிரை சித்தாந்தமற்ற போராட்டம் பறித்தது. மினாவின் மரணம் அவருடைய சகோதரிக்கும் காதலிக்கும் தெரிவிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்தான் ஒரு போராட்டத்தில் கேத்தரீனை சந்தித்திருந்தார் மினா டேனியல். போராட்டத்தோடு காதல் வளர்த்தார்கள் இருவரும். இலக்கை எட்டும் முன்னமே ஒருவர் பிரிந்தார்.

அரசு மருத்துவமனையில் கிடந்த உயிரற்ற மினாவின் முகம் புன்னகைத்துக் கொண்டிருந்தது. மினாவின் லட்சியம் மரிக்காது என உணர்த்திக் கொண்டிருந்தது அந்த மரணப் புன்னகை. மினாவின் லட்சியக் காதலி அந்த மரணப் புன்னகையை முத்தமிட்டார். ஒரு துணியை எடுத்தார். மினா டேனியலின் ரத்தத்தில் துணியை நனைத்தார். இறுதியாக மினாவை ஒருமுறை பார்த்துவிட்டு அவரது ரத்தம் தோய்ந்த துணியை எடுத்துச் சென்றார்.

புரட்சியின் ரத்தமாக அந்தக் காதல் உலக ஏழைகளுக்காக சொட்டிக் கொண்டே இருக்கிறது திசையெங்கும்!

banner

Related Stories

Related Stories