உலகம்

50 ஆண்டுகள் கடந்தும் தீராத மர்மம்... எப்படி தப்பித்தார் டேன் கூப்பர்?

இன்றுவரை டேன் கூப்பர் அமெரிக்க மக்களுக்கு ஒரு மாயாவி.

50 ஆண்டுகள் கடந்தும் தீராத மர்மம்... எப்படி தப்பித்தார் டேன் கூப்பர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நவம்பர் 24 1971.

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் விமான நிலையம், வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. நார்த்வெஸ்ட் விமான நிறுவனத்தின் கவுண்டரில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். தன்னை டேன் கூப்பர் என அறிமுகப்படுத்திக் கொண்டான். சியாட்டில் செல்வதற்கு டிக்கெட் கேட்டான்.

பயணிகள் அமர்ந்ததும் விமானம் வானேற நகர்ந்தது. கூட்டம் இல்லை. பல இருக்கைகள் காலியாக இருந்தன. ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகன் போல டிப்-டாப்பாக அமர்ந்திருந்தான் டேன் கூப்பர். வயது நாற்பதுகளில் இருக்கலாம். கோட் சூட்டுக்கு மேலே மெல்லிய மழைக் கோட்!

விமானம் வானேறியது.

டேன் கூப்பர் மீண்டும் பணிப்பெண்ணை அழைத்தான். அவள் கையில் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்தான் டேன் கூப்பர். ரகசியம் சொல்வதைப் போல பணிப்பெண் அருகே மெல்ல சாய்ந்து கிசுகிசுத்தான். “நான் வெடிகுண்டு வச்சிருக்கேன். அந்த துண்டுச் சீட்டை பிரிச்சுப் படிங்க”

வெலவெலத்துப் போனாள் பணிப்பெண். அவளை தன்னருகே அமரச் சொன்னான் கூப்பர். சூட்கேஸை லேசாகத் திறந்தான். எட்டு சிறு உருளைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. அவற்றுடன் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒயர்களுக்கு ஒரு பேட்டரி உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டு!

“2 லட்சம் டாலர் ரொக்கமா, சில்லரை நோட்டுகளா வேணும். கூடவே நாலு பாராசூட் கொடுக்கணும். விமானம் தொடர்ந்து பறப்பதற்கான எரிபொருள் சியாட்டில் விமான நிலையத்துல இருக்கணும்.”

தகவல் தரைதள அதிகாரிகளை அடைந்தது.

நிறுவனத்தின் இயக்குநர் டொனால்ட் நைரொப்புக்கும் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. பயணிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதும் முக்கியமாக விமான நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதுமே அவருக்கு முக்கியம். 2 லட்சம் டாலர் பணம் சில்லரை நோட்டுகளில் தயாரானது.

டேன் கூப்பரின் அருகே வந்து காதில் கிசுகிசுத்தாள் பணிப்பெண். இயந்திரக் கோளாறு சரியாகி சியாட்டிலை நோக்கி விமானம் செல்வதாக விமானத்துக்குள் அறிவிக்கப்பட்டது. மக்கள் பெருமூச்சு விட்டார்கள். கூப்பர் புன்னகைத்தான்.

மாலை 5.39 மணி. விமானம் சியாட்டிலில் தரையிறங்கியது.

நார்த்வெஸ்ட் விமான நிறுவனத்தின் மேலாளர் சாதாரண உடையில் விமானத்தை நோக்கி வந்தார். அவர் கையில் பணமும் பாராசூட்டுகளும் இருந்தன. விமானத்தின் சரக்குப் பகுதி கதவு வழியாக உள்ளே கொடுக்கப்பட்டது. அடுத்து ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்தான். எல்லா பயணிகளும் பணிப்பெண்களும் வெளியேறலாம் என்றான்.

50 ஆண்டுகள் கடந்தும் தீராத மர்மம்... எப்படி தப்பித்தார் டேன் கூப்பர்?

மெக்சிகோவை நோக்கி விமானம் செல்ல வேண்டும் என்றான் கூப்பர். தீவிர ஆலோசனைக்கு பிறகு நெவேடா நகரத்தில் மீண்டும் நின்று எரிபொருள் நிரப்புவது என தீர்மானிக்கப்பட்டது. எல்லா விவரங்களும் விமான நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டன. ஒரு விஷயத்துக்கு மட்டும் நிறுவனம் மறுத்தது.

விமானத்துக்கு சரக்கு ஏற்றப்படும் வழி விமானம் புறப்பட்டு வானேறிய பிறகும் திறந்திருக்க வேண்டுமென கூப்பர் சொன்னான். அவனுடைய திட்டம் ஓரளவுக்கு புரியத் தொடங்கியது. சரக்குப்பகுதியின் படிகள் இறக்கிவிட்டபடி வானேறுவது விமானத்தின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றது நிறுவனம். கூப்பர் எதுவும் வாதாடவில்லை. சரக்குப்பகுதியின் கதவு திறந்திருக்கும் வரை போதும் என நினைத்துக் கொண்டான்.

இரவு 7.40 மணிக்கு விமானம் மீண்டும் வானேறியது. மொத்தமாக விமானத்தில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்.

கூப்பர் செல்லும் போயிங் விமானத்துக்கு மேலாக ஒரு போர் விமானம், கீழாக ஒரு போர் விமானம். கூப்பர் எப்படி பார்த்தாலும் தெரியாத வகையில் போயிங் விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன போர் விமானங்கள். அவையல்லாமல் மேலும் மூன்று விமானங்கள் சற்று இடைவெளி விட்டு முன்னும் பக்கவாட்டிலும் பறந்து கொண்டிருந்தன. மொத்தமாக ஐந்து விமானங்கள்.

இரவு எட்டு மணி! விமானிகளின் அறைக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. சரக்குப் பகுதியின் படிகள் இறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை மணி!

இரவு 10.15 மணி. விமானம் இறங்கியதும் பரபரப்பாக புலனாய்வு அதிகாரிகளும், காவல்துறையினரும் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

கூப்பர் இல்லை!

காலம் ஓடியது. கூப்பர் சிக்கவில்லை. பல ஊகங்கள் உருவாகின. கூப்பரின் தோற்றத்தைக் கொண்ட பல பேரை பார்த்து உருவாக்கப்பட்ட ஊகங்கள். போயிங் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஓர் ஊழியரே கூப்பர் என்றுமொரு ஊகம். ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

10,000 அடி உயரத்திலிருந்து கடும் மழையில் இருட்டுக்குள் குதித்த ஒருவன் காட்டில் விழுந்து இறந்திருப்பதற்கே சாத்தியங்கள் அதிகமென வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான தகவல்! புலனாய்வுத் துறையின் அதிகாரியான ஃப்ரெட் கட் என்பவர், பத்து வருடங்களுக்கு முன்பே கூப்பர் இறந்துவிட்டான் என ஓர் ஊடகப் பேட்டியில் கூறினார். அவருக்கு தெரிந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை மார்லா கூப்பர் என்ற ஒரு பெண் தொடர்பு கொண்டு, அத்தகவலை சொன்னதாகவும் குறிப்பிட்டார். அதை தொடர்ந்து மார்லா தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தார். அவருடைய உறவினரான லின் டாயல் கூப்பர்தான் டேன் கூப்பர் என்றார்.

சம்பவம் நடந்தபோது மார்லாவுக்கு எட்டு வயது. ஒரு விடுமுறை காலத்தில் கூப்பரின் வீட்டுக்கு சென்றிருக்கையில் அங்கு அவன் இன்னொரு உறவினருடன் அமர்ந்து எதையோ தீவிரமாய் திட்டமிட்டுக் கொண்டிருந்ததாக நினைவுகூர்கிறார் மார்லா. பறவை வேட்டைக்காக சில நாட்கள் கூப்பரும் உறவினரும் சென்றதாக சொல்லும் மார்லா, இருவரும் திரும்ப வருகையில் கூப்பர் காயம்பட்டிருந்தான் எனவும் கூறுகிறார். 1995ஆம் ஆண்டு மார்லாவின் தந்தை இறப்பதற்கு முன்னால், கூப்பர்தான் விமானத்தை கடத்தியதாக சொன்னார் என்றும் சொல்கிறார் மார்லா.

இன்றுவரை டேன் கூப்பர் அமெரிக்க மக்களுக்கு ஒரு மாயாவி. ஓர் அரசையே ஏய்த்து தப்பியது மட்டுமல்லாமல் முழுமையாக வாழ்வை வாழ்ந்து முடித்து நிம்மதியாக இறந்திருக்கிறான் என்றால், கூப்பரின் அசகாயம் அசாத்தியமானதே!

banner

Related Stories

Related Stories