உலகம்

டி.வி நிகழ்ச்சி மூலம் மாட்டிக்கொண்ட கொடூர கொலையாளி... ஜான் லிஸ்ட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

ஜான் லிஸ்ட் வழக்கு பற்றிய நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டே கால் கோடி மக்கள் பார்த்தனர்.

டி.வி நிகழ்ச்சி மூலம் மாட்டிக்கொண்ட கொடூர கொலையாளி... ஜான் லிஸ்ட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நவம்பர் 9, 1971.

நியூ ஜெர்சியில் வசிக்கும் ஜான் லிஸ்ட்டின் குடும்பத்துக்கு மற்றுமொரு காலை புலர்ந்தது.

அந்த நாள் தனக்கான குரூரத்தை மெல்ல கட்டவிழ்க்கத் தொடங்கியது.

13 வயதான ஃப்ரெடரிக், 15 வயதான ஜான் ஜூனியர் மற்றும் 16 வயதாகும் பெட்ரிஷியாவுடனும் வழக்கம் போல் காலை உணவு உட்கொண்டார்.

உணவுக்குப் பின் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிச் சென்றனர். அதற்குப் பிறகுதான் மனைவி ஹெலன் கண்விழித்தார். காபி குடிப்பதற்காக படுக்கையறையிலிருந்து கீழே வந்தார். கொஞ்ச நேரம் ஜான் ஹெலனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஹெலனருகே வந்து நின்ற ஜானின் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. ஹெலனுக்கு ஏதும் தெரியவில்லை. சட்டென அவர் தலையில் வைத்து துப்பாக்கியின் விசையை அழுத்தினார் ஜான்.

தோட்டா ஹெலனின் உயிரைக் குடித்தது.

ஜான் நிதானமாக ஹெலனின் உடலை ஒரு பைக்குள் வைத்துச் சுற்றி இன்னொரு அறையில் ஒளித்து வைத்தார்.

84 வயதான அல்மா தனக்கென காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார். அவரருகே வந்த ஜான் அன்புடன் முத்தமிட்டார். ஜான் தன் துப்பாக்கியை தாயின் நெற்றியில் வைத்து விசையை அழுத்தினான்.

மீண்டும் கீழே வந்தான். தேங்கியிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தப்படுத்தினான்.

சில கடிதங்கள் எழுதினான். பிறகு தொலைபேசியில் பலரை தொடர்பு கொண்டான். உடல்நலம் குன்றியிருக்கும் ஒரு உறவினரை பார்ப்பதற்கு குடும்பத்தோடு கிளம்பப் போவதாக கூறினான். தபால் அலுவலகத்துக்குச் சென்று எழுதிய கடிதங்களை அனுப்பினான். சில நாட்களுக்கு தபால் கொண்டு வர வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டான். வீட்டுக்கு வரும் பால், செய்தித்தாள் போன்ற அனைத்தையும் நிறுத்தச் சொல்லிவிட்டான். கடைசியாக வங்கிக்குச் சென்றான். அவனது அம்மா வைத்திருந்த 2000 டாலருக்கான கடன் பத்திரத்தை கொடுத்து பணத்தை எடுத்தான்.

வீடு திரும்பி ஒரு நல்ல சேண்ட்விச் செய்து சாப்பிட்டான் ஜான். பள்ளிக்கு சென்று மகள் பேட்ரிஷியாவை வீட்டுக்கு அழைத்து வந்து அவளின் தாடையில் துப்பாக்கியை வைத்து சுட்டு உயிர் குடித்தான் ஜான்.அடுத்து வந்த மகன் ஃப்ரெட்டுக்கும் அதே நிலைதான். மிஞ்சியிருந்தவன் ஜான் ஜூனியர் மட்டும்தான்.

பள்ளிக்குச் சென்றான். மகன் கால்பந்து விளையாடுவதை நின்று பார்த்தான். பின் வீட்டுக்கு அழைத்து வந்தான். சமையலறையில் வைத்து ஜான் ஜூனியரின் பின்னந்தலையில் ஜான் சுட்டான். ஆனால் ஒரு சிக்கல். பிறர் உடனே மரித்தது போல் ஜான் ஜூனியர் மரிக்கவில்லை. சுட்ட பிறகும் போராடினான். அவனைக் கொல்ல ஜானுக்கு ஒன்பது தோட்டாக்களை செலவு செய்ய வேண்டியிருந்தது.

பிறகு உயிர் போன சடலங்களுக்கு முன்னாலிருந்து கடவுளை பிரார்த்திக்கிறான்.

வீடு முழுக்க ரத்தம். பொறுமையாய் முடிந்த மட்டிலும் ரத்தத்தை சுத்தப்படுத்தினான். பிறகு அமர்ந்து இரவுணவை நிதானமாக உண்டான். பாத்திரங்களை கழுவி காய வைத்தான். பிறகு தன் படுக்கைக்கு சென்றான்.

மறுநாள் காலை.

உடல்கள் கெடாமல் இருக்க குளிர்சாதனத்தின் குளிரை அதிகப்படுத்தினான். வீட்டிலிருந்து எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டான். வெளியே இருப்பவருக்கு வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லா விஷயங்களையும் செய்தான்.

டி.வி நிகழ்ச்சி மூலம் மாட்டிக்கொண்ட கொடூர கொலையாளி... ஜான் லிஸ்ட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

பின் அமர்ந்து ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதிய அக்கடிதம் அவனுடைய பாதிரியாருக்காக. ஐந்து பக்கம் கொண்ட கடிதம். வீட்டிலிருக்கும் எல்லா புகைப்படங்களையும் தேடி எடுத்தான். அவற்றில் அவனுடைய முகத்தை மட்டும் வெட்டி எடுத்தான். பிறகு வீட்டுக்கு வெளியே வந்து கதவைப் பூட்டிவிட்டு கிளம்பினான்.

பல வாரங்கள் கழிந்தன. விளக்குகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின. வீடு இருளுக்குள் மூழ்கத் தொடங்கியது. இசை மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஒரு மாதம் முழுமையாக கழிந்தது. முதல் சந்தேகம் பெட்ரிஷியாவின் நாடக ஆசிரியரிடமிருந்து தொடங்கியது. இன்னொரு ஆசிரியரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். இரண்டு ஆசிரியர்களும் வீட்டைச் சுற்றி சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடுவதை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவலர்களும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். ஆசிரியர்கள் தங்களுக்கு இருந்த சந்தேகத்தை கூறினர்.

படிக்கட்டு அருகே இருந்த ஒரே ஒரு விளக்கு மட்டும்தான் எரிந்தது, மற்ற இடமெல்லாம் இருள். யாரும் இல்லாமல் அடர் இருட்டு இருந்த சூழலுக்குள் பேய்த்தனமாக இசை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. டார்ச் லைட்டுகளின் வெளிச்சக் கற்றைகள் பெரும் கோரத்துக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சின. தூங்கும் பைகளில் சடலங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஜானின் ஒப்புதல் வாக்குமூலக் கடிதம் கிடைத்தது.

வாழ்க்கை விசித்திரமானது. மனம் கொள்ளும் கோணங்கள் சூட்சுமமானவை.

1971ஆம் ஆண்டில் ஜான் லிஸ்ட்டின் வேலை பறிபோய்விட்டது. என்ன செய்வதென அவனுக்குத் தெரியவில்லை. பெரிய வீடு, குடும்பம், வாழ்க்கை எல்லாம் தொலைந்துவிடும் என்கிற பயம்.

ஒவ்வொரு காலையும் வேலைக்கு கிளம்புவது போலவே ஜான் லிஸ்ட் கிளம்பினான். ரயில்வே நிலையத்துக்கு சென்று முழு நாளையும் அமர்ந்து கழித்துவிட்டு வீடு திரும்புவான். வீடு, கார் என வாங்கிய கடன்கள் யாவும் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன.

சாத்தியப்படாத இரண்டாம் வழியை யோசித்து மனதை கல்லாக்கிக் கொண்டு அவ்வழியை சாத்தியப்படுத்தினான்.

மொத்த குடும்பத்தினரையும் கொன்றான்.

1989ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி.

ஜான் லிஸ்ட் வழக்கு பற்றிய நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டே கால் கோடி மக்கள் பார்த்தனர். அவர்களுள் வான்டா ஃப்ளானரியும் அவரின் மகள் ஈவா மிட்சல்லும் அடக்கம். இருவரும் டென்வரில் வசிப்பவர்கள்.

ஜான் லிஸ்ட்டின் தோற்றம் காண்பிக்கப்பட்டதும் அவர்களுக்கு பொறி தட்டியது. அவர்களின் வீட்டருகே முன்பு இருந்த நபரின் முகம். அவரின் பெயர் பாப் க்ளார்க். நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்டதை போலவே அமைதியானவர். எப்போதும் கோட் சூட் அணிந்திருப்பார். அக்கவுண்டண்ட்டாக வேலை பார்த்தார்.

விர்ஜினியாவின் ரிச்மண்ட் பகுதியிலிருக்கும் ஒரு வீட்டுக்கு புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அது பாப் க்ளார்க்கின் வீடு. வீட்டிலிருந்த டெலோரஸ் என்கிற பெண், பாப் க்ளார்க் வேலைக்கு சென்றிருப்பதாக சொன்னார். டெலோரஸ் பாப் க்ளார்க்கின் மனைவி. அதிகாரிகள் அலுவலகத்துக்கு சென்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட தோற்றத்தை பிரதிபலித்த நபரைக் கண்டார்கள். பாப் க்ளார்க் எனப்பட்ட ஜான் லிஸ்ட்!

1989ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 1ஆம் தேதி ஜான் லிஸ்ட் கைது செய்யப்பட்டான். அவன் நிகழ்த்திய கொலைக்குப் பிறகு பதினெட்டரை ஆண்டுகள் கழிந்திருந்தன. ஐந்து ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை பெற்ற பிறகு ஜான் லிஸ்ட்டை நேர்கண்ட ஒரு பேட்டி வெளியானது. அதில் அவன், "என் தாய், மனைவி, மூன்று குழந்தைகள் எல்லாரையும் வீடு இல்லாமல் போகும் அவமானத்திலிருந்து காப்பாற்ற விரும்பினேன். அதனால் அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தேன்” எனக் கூறியிருந்தான்.

பணம், மனிதத்தை அழிக்க உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த கொலைவாள்!

banner

Related Stories

Related Stories