தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் பீட்சா, குளிர்பானங்கள் மற்றும் சாண்ட்விச் போன்றவை சாப்பிடும் காட்சிகளை நாம் நிறையப் பார்த்திருப்போம். மேலும் ஆண்கள், பெண்களுக்குத் தேநீர் பரிமாறுவதையும் விளம்பரங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்த காட்சிகளுக்கு தடைவருமா என்று நாம் ஒரு முறையாவது நினைத்திருப்போமா?, ஏன் இப்படியான ஒரு எண்ணம் நமது மனதில் உதித்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்த சிந்தனை ஈரான் நாட்டிற்கு உதித்துள்ளது.
ஈரானில் புதிதாகத் தொலைக்காட்சி தணிக்கை விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றில் தான் பெண்கள் பீட்சா, சாண்ட்விச் சாப்பிடும் காட்சிகளுக்குத் தடை வித்துள்ளது. மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு, ஆண்களுக்கு தேநீர் வழங்குவது போன்ற காட்சிகளைக் காட்டுவதற்கும், பெண்கள் சிவப்பு நிற குளிர்பானங்களைக் குடிப்பதைக் காட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகை எல்னாஸ் ஹபீபியின் முகத்தை கேமராவில் காட்டக்கூடாது என்றும் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பங்கேற்று வரும் ஈரானிய டாக்ஷோவான பிஷ்கூ நிகழ்ச்சியின் போது அவரின் முகத்தை காட்டாமல் அவரின் குரல் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து புதிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் என்று இஸ்லாமிய குடியரசு ஈரான் ஒளிபரப்பு (IRIP) தலைவர் அமீர் ஹொசைன் ஷம்ஷாதி தெரிவித்துள்ளார்.மேலும், ஈரானிய ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு உரிமம் வழங்குவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஐஆர்ஐபி பொறுப்பாகும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, புதிய ஈரானிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாகப் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக இந்த விதிகள் இருப்பதாகப் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள்.