உலகம்

"எங்களை காப்பாத்துங்க..." : உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரரின் உருக்கமான வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தான் மக்களைக் கைவிட்டுவிடாதீர்கள் என உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

"எங்களை காப்பாத்துங்க..." : உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரரின் உருக்கமான வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தாலிபான்களுக்கும், அரசுப் படைக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல், தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ள நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களைக் கைவிட்டுவிடாதீர்கள், மக்களை அழிப்பதை நிறுத்துங்கள் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் உலகத் தலைவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ரஷித்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத் தலைவர்களே! என் நாடு பெரும் குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பெண்களும் உயிர்த்தியாகம் செய்கின்றனர். வீடுகளும் சொத்துகளும் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

எங்களைக் குழப்பநிலையில் விட்டு விடாதீர்கள். ஆப்கானியர்களை கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கான் அழிவைத் தடுத்து நிறுத்துங்கள்" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் இந்திய பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் சமீபத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories