உலகம்

“மூச்சுவிட முடியவில்லை; கொன்றுவிடாதீர்கள்” : கருப்பின மக்கள் அமெரிக்காவில் போராட்டம் #BlackLivesMatter

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை கொலைவெறியோடு தாக்கிய போலிஸாரின் அடக்குமுறையைக் கண்டித்து அமெரிக்காவில் கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“மூச்சுவிட முடியவில்லை; கொன்றுவிடாதீர்கள்” : கருப்பின மக்கள் அமெரிக்காவில் போராட்டம் #BlackLivesMatter
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 1 லட்சம் பேர் உயிரிழந்த நிலையிலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு அமெரிக்கா திணறிவருகிறது. இந்நிலையில் தற்போது கருப்பின மக்களின் போராட்டத்தால் அமெரிக்கா மேலும் நிலைகுலைந்து போயுள்ளது.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி இரவு நேரத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் அங்குள்ள கடையில் சிகரெட் பாக்கெட் வாங்கச் சென்றுள்ளார். சிகரெட்டிற்காக கடையில் அவர் கொடுத்த 20 டாலர் கள்ளநோட்டு என அறிந்த கடைக்காரர், காவலர்களுக்கு இதுதொடர்பாக புகார் அளித்தார்.

அருகில் இருந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்த ஜார்ஜ் ஃப்ளாய்டை அடையாளம் கண்டு அவரை வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள். காரில் அமர்ந்தவாறே ஜார்ஜ் ஃப்ளாய்ட் எதற்காக வெளியே வர சொல்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெரெக் சவு என்ற போலிஸார் ஜார்ஜ் ஃப்ளாய்டை வெளியே இழுத்து தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து தரையோடு தரையாக அழுத்திப் பிடித்துள்ளார்.

அப்போது வலி தாங்கமுடியாமல் ஜார்ஜ் ஃப்ளாய்ட், ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை; என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ என்று பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவரின் அழுகையைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் டெரெக் சவு இருந்துள்ளார். அவருடன் அன்று பணியில் இருந்த தாமஸ் லேன், டோ தாவோ மற்றும் அலெக்சாண்டர் குயெங் ஆம்புலம் ஆகியோரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் மூச்சுவிடமுடியாமல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புன்ஸ் வரும் வரை டெரெக் சவுவின் அவருடைய காலை ஜார்ஜ் கழுத்தில் இருந்து எடுக்கவில்லை. இதனையடுத்து ஜார்ஜ் ஃப்ளாய்டை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஜார்ஜ் ஃப்ளாய்டை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்வத்தை டேர்னெல்லா ஃப்ரேசியர் என்ற 17 வயது பெண் ஒருவர் தனது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். காவலர்களின் இனவெறியே இத்தகைய கொடூரத்திற்கு காரணம் என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜார்ஜ் ஃப்ளாய்டை காவலர்களை எதிர்க்காமல், வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக சமூக வலைதளங்களில் டேர்னெல்லாவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

“மூச்சுவிட முடியவில்லை; கொன்றுவிடாதீர்கள்” : கருப்பின மக்கள் அமெரிக்காவில் போராட்டம் #BlackLivesMatter

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து டேர்னெல்லா, “நான் சிறியவள். எனக்கு 17 வயதுதான் ஆகிறது. நிச்சயம் அந்த காவலரை என்னால் தனியாக எதிர்த்து நின்றிருக்க முடியாது. அப்போது அதிக பயத்திலும் பதற்றத்திலும் மூழ்கிப் போயிருந்தேன். அதுவும் இல்லாமல் நானும் கருப்பின பெண்ணாக இருப்பதால் அந்த நேரத்தில் பிரச்னையை மூடி மறைத்திருப்பார்கள்.

நான் பதிவிட்ட வீடியோதான் இன்று உலகம் முழுவதும் பகிரபட்டுள்ளது. அங்கு நடந்த அனைத்தையும் நான் பதிவு செய்திருந்தேன். ஜார்ஜின் நெருங்கிய உறவினர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வேதனையுடன் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கருப்பின மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவில் அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “நாங்கள் சுவாசிக்கவேண்டும்; எங்களைக் கொல்லாதீர்கள், கொல்வதை நிறுத்துங்கள். எங்களுக்கு நீதி வேண்டும்” என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பின மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது.

“மூச்சுவிட முடியவில்லை; கொன்றுவிடாதீர்கள்” : கருப்பின மக்கள் அமெரிக்காவில் போராட்டம் #BlackLivesMatter

போராட்டம் இந்த அளவுக்கு தீவிரமானதற்குக் காரணம், கொலைவெறியோடு தாக்குதல் நடத்திய போலிஸாரை அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காமல் வெறும் பணிநீக்கம் மட்டுமே செய்துள்ளதே. அதனால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றன.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. அந்த வீடியோ பார்க்கும்போது நான் கலங்கிவிட்டேன். எனது மனதை மிகவும் உடையச் செய்தது. அவருடைய கழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்த முழங்கால் உதவிக்கான அழுகையைப் புறக்கணித்துவிட்டு கறுப்பின மக்களை கீழே வைத்திருப்பதற்கான உருவகமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதில் எடுத்த நடவடிக்கை அம்மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காலங்காலமாக பல தலைவர்கள் கறுப்பின மக்களுக்காவும் நிறவெறிக்கு எதிராகவும் போராடிவரும் நிலையில் கருப்பின மக்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் அதிகரித்து வருவது எதிர்காலம் குறித்து கவலையடையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories