உலகம்

உலகத் தலைவர்களை ‘வணக்கம்’ சொல்ல வைத்த ‘கொரோனா’!- இந்திய கலாச்சாரத்துக்கு கூடுகிறது மவுசு!

கையைக் கொடுத்தால் உடனே தொற்றிக் கொள்ளும் என்ற நிலையில் கொரோனா வைரஸ்க்கு பயந்து கைகூப்பி ‘வணக்கம்’ சொல்லும் வழக்கத்திற்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.

வணக்கம் சொல்லும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்.
வணக்கம் சொல்லும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உலக வரலாற்றில் அவ்வப்போது தோன்றும் ஆட்கொல்லி வைரஸ்கள் சில மாற்றங்ளை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன. தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நமக்கு சில பாடங்களை கற்றுத் தந்துள்ளது.

சீன நாட்டின் உகான் நகரில் ஒருவரை தாக்கியபோது கொரோனா வைரஸின் கொடூரம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்தியா உள்ளிட்ட 132 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. 1 லட்சத்து 38 ஆயிரத்து 937 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது. இதுவரை 5,111 உயிர்களை பலிகொண்டுள்ளது.

மேலும், பல நாடுகளுக்கு பரவும் அபாயத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்கும்படி பணித்துள்ளது.

அமெரிக்காதான் கொரோனாவை பரப்பிவிட்டது என்று சீன அலறுகிறது. கை கழுவும் திரவமும், முகத்தில் அணியும் கவசங்களும் அத்தியாவசிய பட்டியலுக்கு வந்துள்ளன.

இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு இன்னும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத பரிதாப நிலை தொடர்கதையாய் நீளுகிறது.

இந்த வைரசை தடுக்க என்னதான் வழி என்றால் மிக முக்கிய வழி, ஒருவரோடு ஒருவர் உடல் ரீதியிலான தொடர்பில் இல்லாமல் இருப்பதுதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாய் கை குலுக்கி பேசுவதை தவிர்த்தால் கொரோனாவை தவிர்க்கலாம் என்கிறார்கள்.

அயர்லாந்து பிரதமருக்கு வணக்கம் சொல்கிறார் அமெரிக்க அதிபர்.
அயர்லாந்து பிரதமருக்கு வணக்கம் சொல்கிறார் அமெரிக்க அதிபர்.

உலக நாடுகள் பலவற்றிலும் தலைவர்கள், பிற நாட்டு தலைவர்களை, தூதர்களை, விருந்தினர்களை வரவேற்கும் முறையே இந்த கை குலுக்கல்தான். கைகுலுக்கி தங்கள் நட்பை பறிமாறிக்கொள்ளும் நிலையில் தற்போது உலகத் தலைவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு மாறியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகத்தலைவர்களை ‘வணக்கம்’ சொல்ல பணித்துள்ளது.

கை குலுக்கலிலும், கட்டித்தழுவுவதிலும் புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து தன்னை சந்தித்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கரருடன் கை குலுக்கவும் இல்லை. கட்டித்தழுவவும் இல்லை. டிரம்பும், லியோ வரத்கரரும் ஒருவருக்கொருவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த காட்சி உலக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் வணக்கம் சொல்லும் காட்சி.
பிரான்ஸ் அதிபர் மெக்ரான் வணக்கம் சொல்லும் காட்சி.

“நாம் இப்படி வணக்கம் தெரிவித்துக் கொள்ளலாம் (கை கூப்புகிறார்). இந்தியாவிடம் இருந்து இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். அங்கு யாருடனும் நான் கைகுலுக்கவில்லை. இது எளிதாகத்தான் இருக்கிறது” என்று சொல்லி புன்னகைத்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, நாட்டு மக்கள் யாரும், யாரையும் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுங்கள் போதும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம், இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் வணக்கம் சொல்லும் பழக்கத்திற்கு மாறிவிட்டார். இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவல் லெனைன் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவுக்கு 2018-ம் ஆண்டு சென்றிருந்தபோது, அங்கு அதிபர் மேக்ரான் கண்டறிந்த கலாசாரம் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இனி அவர் வணக்கம் சொல்லித்தான் வாழ்த்து தெரிவிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்”.

இதுமட்டுமல்ல, லண்டனில் நடந்த இளவரசர் அறக்கட்டளை விருது விழாவில் பங்கேற்றவர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கைகூப்பி ‘வணக்கம்’ தெரிவித்துள்ளார்.

ஆக, கொரோனா வைரஸ் தொற்றுவதை தவிர்க்க, ‘வணக்கம்’ என்ற இந்திய கலாச்சாரத்தை தொற்றிக் கொண்டுள்ளனர் உலகத் தலைவர்கள்.

banner

Related Stories

Related Stories