
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் 6:12 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8:12) உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கி போயிங் 737 - 800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
போயிங் விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவிலேயே பரந்த் மற்றும் ஷஹ்ரியர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்தவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
ஈரான்தான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கனடா பிரதமர் மற்றும் அமெரிக்கா ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால் ஈரான் அதனை மறுத்துவந்தது. இதனிடையே ஈரான் அரசு விமான விபத்துத் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தியது. மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டியையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்நிலையில், போயிங் 737 - 800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானத்தை அமெரிக்க போர் விமானம் என தவறுதலாக நினைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானின் இந்த செயலுக்கு அந்நாட்டு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளபோதும் பலரும் ஈரானுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். மனித தவறு காரணமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த அழிவுகரமான தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. என் வருத்தங்களையும், பிரார்த்தனைகளும் துக்க குடும்பங்கள் அனைவருக்கும் செல்கின்றன. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 பேர் உக்ரைன் நாட்டவர்கள் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 10 சுவீடன் நாட்டவர்கள், 4 ஆப்கானியர்கள், 3 பிரிட்டன் நாட்டவர்கள் மற்றும் 3 ஜெர்மானியர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.








