உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையை செர்பியா நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 334 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது, சட்டத்திட்டங்களை கடுமையாக வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி மற்றும் அஜ்மான் ஆகிய நகரங்கள்தான்.
மூன்றாவது இடத்தை கத்தாரின் தோஹா பிடித்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்திய நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், 40வது இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மங்களூருவும், 76வது இடத்தை குஜராத் மாநிலம் வதோதராவும், 82வது இடத்தை அதே மாநிலத்தைச் சேர்ந்த அகமதாபாத்தும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில், சூரத் 94வது இடத்தையும், நவி மும்பை 105வது இடத்தையும் பிடித்திருந்தாலும், இவை எதுவுமே பெருநகரங்கள் இல்லை. அதே நேரத்தில், பாதுகாப்பு அளவீட்டில் 60 சதவீதத்தை கொண்டுள்ள சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இதன்மூலம், மிகவும் பாதுகாப்பான இந்தியாவின் பெருநகரம் சென்னை என்ற பெயர் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில்தான், இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
குற்ற சம்பவங்களில் டெல்லி முதலிடமும், 2வது இடத்தை நொய்டாவும், 3வது இடத்தை குர்கானும் பிடித்துள்ளன. உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரம் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.