அரசியல்

கர்நாடகா : பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை.. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்த காங்கிரஸ் அரசு !

பள்ளி, கல்லூரி தேர்வகள் மட்டுமின்றி அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா : பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை.. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்த காங்கிரஸ் அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த அடக்குமுறை மிகவும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகத்திலும் இந்த அடுக்குமுறை நிகழ்ந்தது.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு வரை பாஜக ஆட்சியில் இருந்து வந்தது. அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சில தாக்குதல்கள் பிரசாரங்கள் நிகழ்ந்தது. அதில் முக்கியமானவையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பியு என்ற கல்லூரியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வரக்கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு அந்த கல்லூரி ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல், மாணவிகளை ஹிஜாபை கழற்ற வற்புறுத்தினர்.

கர்நாடகா : பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை.. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்த காங்கிரஸ் அரசு !

தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு அம்மாநிலம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக இந்துத்வ கும்பல் சேர்ந்து மேலும் போராட்டம் நடத்தினர். உடுப்பி கல்லூரியில் தபசும் ஷேக் என்ற மாணவி, ஹிஜாப் அணிந்து வந்த போது, மதவெறி பிடித்த கயவர்கள் அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு ரகளை செய்தனர். அப்போது, ஒற்றை ஆளாக அவர்களை எதிர்த்து நின்று, ‘அல்லா ஹு அக்பர்’ என்று உரத்த குரலில் கோஷமிட்டு, ஆவேசப் போராட்டத்தை நடத்தினார் தபசும் ஷேக்.

மத கலவரத்தை தூண்டும் விதமாக இந்துத்வ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சில மக்கள் பாதிக்கபட்டனர். தொடர்ந்து இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் பூதாகரமான ஆன நிலையில், ‘மத அடையாளமான’ ஹிஜாப்பை அனுமதிக்க முடியாது என கர்நாடகா பா.ஜ.க அரசு பிடிவாதமாக உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுப் பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கர்நாடகா : பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை.. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்த காங்கிரஸ் அரசு !

இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில் தற்போது கல்வி நிலையங்களில் ஹிஜாபுக்கு தடை என்ற உத்தரவை நீக்கியுள்ளது அம்மாநில அரசு.

அதாவது பள்ளி, கல்லூரி தேர்வகள் மட்டுமின்றி அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது கர்நாடக அரசு. அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வுகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது மீண்டும் மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர், "ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள், ஹிஜாப் விவகாரத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஹிஜாப் விவகாரத்தில் 'அல்லாஹ் ஹு அக்பர்' என்று முழக்கமிட்ட மாணவி தபசும் ஷேக், கர்நாடகா மாநிலத்தின் பி.யு.சி 2-ஆம் ஆண்டு தேர்வின் கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories