வைரல்

"காவல்துறை அதிகாரியாக திருப்திகரமான நாள்" : இணையத்தில் வைரலாகும் திருவண்ணாமலை SP கார்த்திகேயன் ட்வீட்!

பட்டியலின மக்கள் கோயிலுக்கு அழைத்துச் சென்றது குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

"காவல்துறை அதிகாரியாக திருப்திகரமான நாள்" :  இணையத்தில் வைரலாகும் திருவண்ணாமலை SP கார்த்திகேயன் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட தென் முடியனூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குள் பட்டியலின மக்களை நுழைய விடாமல் ஒரு சமூகத்தினர் தடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாகக் கோயிலுக்குள் நுழையாமல் இருந்து வந்தனர்.

"காவல்துறை அதிகாரியாக திருப்திகரமான நாள்" :  இணையத்தில் வைரலாகும் திருவண்ணாமலை SP கார்த்திகேயன் ட்வீட்!

'எங்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என இவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்துள்ளது. இதையடுத்து அந்த கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இதையடுத்து பட்டியலின மக்கள் எங்களையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கிராமத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் ஒரு சமூகத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்து சிறப்புப் பூஜைகளைச் செய்தனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

80 ஆண்டு கனவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பட்டியலின மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, "காவல்துறை அதிகாரியாக என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்" என திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "80 ஆண்டுகளாகக் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழிப்பு தினத்தில் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தோம். பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டியுள்ளோம். காவல்துறை அதிகாரியாக என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்" என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் 'அனைத்து மக்களுக்கான அரசு இந்த திராவிட மாடல் அரசு' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மெய்பித்துள்ளது இந்நிகழ்வு. மேலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories