வைரல்

அது என்ன Solitude?.. இந்த சொல்லுக்கும் மனித வாழ்க்கைக்கு என்ன சம்மந்தம்?

தனிமையை எட்ட நின்று பார்த்து பயப்படும் மனம், அதன் ருசியை ஒருமுறையேனும் அறிந்துகொண்டால் திரும்ப உறவெதையும் நாடாது.

அது என்ன Solitude?.. இந்த சொல்லுக்கும் மனித வாழ்க்கைக்கு என்ன சம்மந்தம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அது என்ன Solitude? அப்படி என்றால் என்ன?

தனிமையில் இருத்தல் என மொழிபெயர்க்கலாம். 'எனது சொந்தம் நீ. எனது பகையும் நீ' என்ற பாடலுக்கு நிகரான உணர்வு. காதலை மட்டும் சொல்லவில்லை. பொதுவாய் எல்லா உறவுகளுக்கும் இது தகும்.

மிருகங்களில் ஓரளவுக்குத்தான் தனிமை உணர்வு உள்ளதே ஒழிய நம் அளவுக்கு இல்லை. உள்ளுணர்வை கொண்டு அவை ஜீவித்து கொள்ளும். ஒரு நாயை நீங்கள் வளர்த்த பிறகுதான், அது உங்களை தேடும். யாராலும் வளர்க்கப்படாத தெருநாய், 'நமக்கு என யாரும் இல்லையே' என இரவு வானத்தை பார்த்து கவிதை எழுதாது.

மனம் என்பது ஒரு வளர்க்கப்பட்ட நாய். அன்பு, உறவாடுதல் ஆகியவற்றால் அந்த நாய் பழக்கப்படுத்தப்படுகிறது. அதற்கு பிறகு அந்த உறவுகளில், 'இப்படி இருந்தால்தான் இனி இந்த அன்பு' என்பதான நிபந்தனைகள் உருவாக்கப்படுகையில் அந்த நாய் துவள்கிறது.

அது என்ன Solitude?.. இந்த சொல்லுக்கும் மனித வாழ்க்கைக்கு என்ன சம்மந்தம்?

Artificial Intelligence என்ற ஒரு ஆங்கில படம். ஸ்பீல்பெர்க் எடுத்தது. அதில் அன்பு காட்டும் ஒரு ரோபோவை ஒரு தம்பதி வாங்குகிறார்கள். அது மகன் ரோபோ. முதலில் அந்த ரோபோவை தன் மகனாக ஏற்று கொள்ள மறுக்கும் பெண், பின் அந்த ரோபோவின் வெள்ளந்தியான அன்பில் இளகி, ஏற்று கொள்கிறாள். ஆனால், அச்சமயத்தில் கோமாவில் கிடந்த உண்மையான மகன் எழுந்து விடுகிறான். ரோபோவின் தேவை இல்லாமல் போய் விடுகிறது. அதை கொண்டு போய் காட்டில் விட்டுவிடுகிறாள்.

அன்பு மட்டும் காட்ட ப்ரொக்ராம் செய்யப்பட்ட ரோபோ, நிர்கதியாக விட்டால் அது என்ன செய்யும் பாவம்?

அப்படியான ரோபோக்களும், அன்புக்கு பழக்கப்பட்ட நாய்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த ரோபோக்களையும் நாய்களையும் எல்லா உறவுகளும் திரும்ப திரும்ப தனிமைக்கே விரட்டி விடுகின்றன.

வாசலுக்கு வந்து நிற்கும் நாய்க்கு சோறு வைக்கிறோம். அன்புக்கு ஏங்கி நிற்கும் மனதுக்கு மட்டும் அன்பு வைக்க மறுக்கிறோம். பொருள் தேடும் உலகில் நேரத்தை சேமித்து மனிதர்களை விரயமாக்கும் கட்டத்திற்கு வந்து நிற்கிறோம்.

அது என்ன Solitude?.. இந்த சொல்லுக்கும் மனித வாழ்க்கைக்கு என்ன சம்மந்தம்?

ஆனால் ஒரு விஷயம். தனிமையை எட்ட நின்று பார்த்து பயப்படும் மனம், அதன் ருசியை ஒருமுறையேனும் அறிந்துகொண்டால் திரும்ப உறவெதையும் நாடாது. இயற்கை என்னும் பேரியக்கத்தின் சிறு இயக்கமாக தன்னை இணைத்து கொள்ளும். அதன் பிறகு நீங்கள் அன்பு வைக்க மறுத்த நாய்களும் நேசத்தை புறக்கணித்த ரோபோக்களும் புத்தர்கள் தான்.

நீங்கள் எட்ட முடியாத தூரத்திற்கு அவர்கள் போய் விடுவார்கள், நிலவை போல்.

மனித சமூகத்தின் அடிப்படையே கூட்டு வாழ்க்கைதான். அதில் நேச புறக்கணிப்பு, அன்பு மறுப்பு எல்லாம் மனிதவிரோதம்தான். அந்த மனிதன் தனிமையை அடைந்தது உங்களுக்கு தலைவலி குறைந்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையில் உங்களுக்கென இருந்த ஒரு மனதை நீங்கள் தள்ளிவிட்டிருக்கிறீர்கள். அந்த வகையில் உண்மையில் இழந்தது நீங்கள்தான். அவரல்ல. அவர் Solitude-ன் வழி இயற்கை பேராற்றலுடன் இணைந்துவிடுகிறார்.

banner

Related Stories

Related Stories