வைரல்

'பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த தரமான சம்பவம்' - ஊரடங்கு வாழ்வின் அற்புதம்!

ஊரடங்கில் இடப்பெயர்வு மையமாக செயல்பட்ட பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த சிறப்பான செயல் ஒன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

'பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த தரமான சம்பவம்' - ஊரடங்கு வாழ்வின் அற்புதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் கூக்குரல் ஒலித்து வருகிறது. சீனாவில் இருந்து புறப்பட்ட இந்த வைரஸ் இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை ஈரான் முதல் இத்தாலி வரை இப்போது இந்தியாவிலும் தனது கரங்களை விரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய ஊரடங்கிற்கு அரசாங்கம் முடிவு செய்து கடந்த 23ந் தேதி முதல் வரும மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் அல்லல்பட்டனர். மீறி நடந்து சென்றவர்களில் சிலர் விபத்துகளிலும், பசி பட்டினியால் சிலரும் இறந்து போயினர்.

இந்த நிலையில் ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 54 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போக முடியாத காரணத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த கிராம நிர்வாகம் சார்பில் மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் பள்ளிக்கூடத்தின் அசுத்தத்தை போக்க முடிவு செய்தனர். 20 ஆண்டுகளாக வண்ணம் பூசப்படாமல் அழுக்கடைந்து மோசமாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு வண்ணம் பூசுவதென்று முடிவெடுத்து கிராம நிர்வாகத்திடம் கூறினர்.

'பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த தரமான சம்பவம்' - ஊரடங்கு வாழ்வின் அற்புதம்!

கிராம நிர்வாகத்தின் உதவியுடன், பள்ளிக்கூடத்திற்கு வெள்ளையடித்து, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தப்படுத்தி அழகாக்கிக் காட்டியிருக்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.

இந்த வேலைக்காக அவர்கள் ஒரு பைசா கூட சம்பளமாக பெறவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் பள்ளிக்கூடம் இது. நாங்கள் ஓய்வையும் விரும்பவில்லை, எங்களுக்கு கிராம நிர்வாகம் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக நாங்கள் பள்ளிக்கு வண்ணம் பூசினோம். சும்மா இருப்பதை விட ஊரடங்கை பயனுள்ளதாக ஆக்க இதனைச் செய்தோம் என்று பெருமிதத்துடன் கூறினர்.

ஊரடங்கு வாழ்வில் புலம்பெயர் தொழிலாளர்கள் அளித்த சிறப்பு பரிசு இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இதுபோன்ற மனிதநேய செயல்கள் நிறையவே வெளிப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories