நாட்டில் கடந்த 23ந் தேதியன்று இரவு 8 மணிக்கு, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் காரணமாக கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர். பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.
இந்தநேரத்தில் திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.
அவர்களில் முருகன் என்ற இரண்டு கால்கள் இழந்த பிச்சைக்காரரும் அடக்கம். இப்படியாக சொந்த ஊர் செல்ல முடியாத சூழலில் புதுச்சேரி ரயில் நிலையம் இழுத்து மூடப்பட்டதால் வேறு வழியில்லாமல் முருகனும், மற்றவர்களும் ரயில் நிலையம் எதிரில் உள்ள இருதய ஆண்டவர் கோயில் அருகே பிளாட்பாரத்தில் தங்கினர்.
இப்படி அகதிகளாக மாறிவிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு அருகில் இருந்த இருதய ஆண்டவர் கோயில் மடத்தில் இருந்து உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த பொட்டலங்களை வாங்கிச் சாப்பிட்டு பிளாட்பாரத்தில் கொசுக்கடியிலும், பூச்சிக்கடியிலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊரடங்கு வாழ்வின் அகதிகள்.
கடந்த 8 நாட்களாக இவர்கள் ரயில் நிலையம் அருகிலேயே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, கொஞ்ச தூரம் நடந்து சென்று நகராட்சி தண்ணீர் குழாயில் குளித்துவிட்டு, அதே உடையைக் கசக்கிப் பிழிந்து போட்டுக் கொண்டு அமர்ந்துள்ளனர். வழியில் வருவோர் போவோர் தரும் சிற்றுண்டிகளையும் சாப்பிட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.
இந்தச் சூழலில்தான் அந்த அதிசயம் நடந்தது. நேற்று காலை திருவண்ணாமலையில் வந்து ஊரடங்கு அகதியாக பிளாட்பாரத்தில் தங்கியுள்ள சக்தி என்ற இளைஞர், மேற்படி பிச்சைக்காரரை நண்பர் உதவியுடன் தூக்கிச் சென்று குளிப்பாட்டி அவரது உடைகளை துவைத்து மாற்றியுள்ளார்.
இந்த மனிதநேயமிக்க காட்சி அந்தப் பகுதியில் போவோர் வருவோரை நெகிழ வைத்தது. இதுகுறித்து அந்த இளைஞர் நம்மிடம் கூறும்போது, “எனது பெயர் சக்தி. திருவண்ணாமலையில் டிரைவராக வேலைபார்த்து வருகிறேன். கடந்த 23ந் தேதி புதுச்சேரியை சுற்றிப் பார்க்க நண்பருடன் வந்தேன். திரும்பிச் செல்ல எந்த போக்குவரத்தும் இல்லாததால் இதே பிளாட்பாரத்தில் தங்கிவிட்டோம்.
எங்கள் பக்கத்தில் இரண்டு கால்களையும் இழந்த பிச்சைக்காரரை பார்த்தோம். அவர் உடம்பு அழுக்காக இருந்தது. இதேநிலை நீடித்தால் அவருக்கு வியாதி வந்துவிடும் என்பதால் அவரை அழைத்துச் சென்று குளிப்பாட்டி உடைமாற்றினேன். அவர் இதனால் சந்தோஷமாக உள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இந்த இடத்தில்தான் படுத்துக் கொள்கிறோம். மடத்தில் இருந்தும், யாராவது நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் இருந்தும் சாப்பிட ஏதாவது கிடைக்கிறது. கிடைப்பதை சாப்பிடுகிறோம். எப்போதாவது ரயில் இங்கிருந்து கிளம்பும். அதில் நாங்கள் சொந்த ஊர் திரும்புவோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஊரடங்கு வாழ்வில் மனிதநேயத்தை கொண்டாடுகிறது புதுச்சேரி ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள நடைபாதை. இவர்களுக்கு அரசும், சுகாதாரத்துறையும் புகலிடம் அளித்து மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்பதே சமூகநல ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.