வைரல்

’வாவ்’ சொல்ல வைத்த ஒரு வைரல் புகைப்படம் எடுக்கப்பட்ட சுவாரஸ்ய கதை!

சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலக அளவில் வைரலானது. இந்த படம் எடுக்க அந்த புகைப்படக் குழு சந்தித்த சிரமங்களை விளக்குகிறது இந்த கட்டுரை.

’வாவ்’ சொல்ல வைத்த ஒரு வைரல் புகைப்படம் எடுக்கப்பட்ட சுவாரஸ்ய கதை!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பாலைவன மணல் திட்டின் உச்சியில் ஒரு ஒட்டகமும் அதன் மேய்ப்பாளரும் நிற்க, பின்னணியில் சூரிய கிரகணம் நிகழ, இரண்டையும் சேர்த்தது போல் அற்புதமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உலக அளவில் வைரலாகியுள்ளது.

’வாவ்’ என்ற வார்த்தையில் இந்த புகைப்படத்தை நாம் கடந்து விடலாம். ஆனால், இதற்கான உழைப்பு கொஞ்சம் கடுமையானது, ஸ்மார்ட்டானதும் கூட. ஜோஷ்வா கிரிப்ஸ் என்பவரின் குழுவே இந்த படத்தை எடுத்துள்ளது. இந்த படம் எடுக்கப்பட்ட இடம், ஐக்கிய அரபு அமீரகம். சவுதி அரேபியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்தில் எடுக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோஷ்வா, ”ஏன் இந்த பாலைவனத்தில் புகைப்படம் எடுக்க முடிவெடுத்தார்?” என்ற கேள்வியில் இருந்து, இதன் பின்னிருக்கும் திட்டமிடல் பற்றி தெரிந்து கொள்வோம்.

Joshua Cripps
Joshua Cripps

கடந்த 26-ம் தேதி நிகழ்ந்தது அரிய சூரிய கிரகணம். அடுத்த நிகழ்வு 2031-ம் ஆண்டு தான் நிகழும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆகையால், இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது என எண்ணிய கிரிப்ஸ், சூரிய கிரகணத்தின் போது போட்டோ ஷூட் ஒன்ற நடத்த முடிவெடுக்கிறார்.

இந்த கிரகணம் உலகின் எந்தெந்த பகுதிகளில் தெளிவாக தெரியும் என்ற தகவலை முதலில் சேகரிக்கிறார். அப்படித் தேடும் போது தான், இந்த பாலைவனப்பகுதியை தேர்வு செய்கிறார். உலகில் பல்வேறு பகுதியில் கிரகண நிகழ்வு தெரிந்தாலும், அங்கு மட்டும் தான் விடிந்து சில நிமிடங்களில் கிரகணம் நிகழ்கிறது என்பதே இதற்கு காரணம். மேலும் பாலைவனப் பகுதி என்பதால், புகைப்படம் எடுப்பதில் எந்த இடர்பாடும் இருக்காது.

கிரகணம் தெளிவாக தெரியும் இடங்கள்
கிரகணம் தெளிவாக தெரியும் இடங்கள்

உலகம் முழுவதும் கிரகணம் ஒரே சமயத்தில் ( Relative Time) நடந்தாலும், நேரம் மட்டும் வெவ்வேறாக இருக்கின்றது. எனவே சூரியன் உதிக்கும் போதே நிகழும் சூர்ய கிரகணத்தை கேமராவில் பதிவு செய்வது எளிது என்பதால், அந்த படம் எடுப்பதற்கான இடமாக ஐக்கிய அரபு அமீரக பாலைவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

திட்டமிட்டபடி, கிரகணத்துக்கு முந்தைய நாள் பாலைவனத்துக்கு சென்றது புகைப்படக் குழு. ஒட்டகத்தையும் கிரகணத்தையும் சேர்த்து ஒரு படம் எடுப்பது என திட்டமிடப்பட்டது. அதற்காக ஒட்டகத்தை வாடகைக்கு எடுத்தாகிவிட்டது. சரி இப்போது, பரந்து விரிந்த அந்த பாலைவனத்தில் எந்த இடத்தில் வைத்து அந்த படத்தை எடுப்பது என்பதை கண்டு பிடித்தாக வேண்டும். கொஞ்சம் சவாலான இலக்கு தான்.

திட்டமிடப்பட்ட காட்சி மாதிரி
திட்டமிடப்பட்ட காட்சி மாதிரி

அவர்கள் திட்டமிட்டப்படி ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டுமானால், குறைந்தது 300 மீட்டர் தொலைவில் இருந்து படம் எடுக்கப்பட வேண்டும் என்பது கிரிப்ஸின் கணிப்பு. சூரியன் உதித்து மேலே வருவது தெரிய வேண்டும்; அதை 300 மீட்டர் தொலைவில் இருந்து படம் எடுக்க சாத்தியப்பட்ட இடமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு மணல் திட்டை நடையோ நடை என நடந்து கண்டடைகின்றனர். அந்த குறிப்பிட்ட மணல் திட்டின் உச்சியில் இருந்து 300 மீட்டர்க்கு அப்பால் கேமராவை வைத்து சோதிக்க வேண்டும். சரியாக 300 மீட்டர் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் சிக்கல் எழுகிறது.

மணல் திட்டின் மேல் இருந்து ஜி.பி.எஸ் மூலம் தூரத்தை கணிக்கும் குழுவினர்
மணல் திட்டின் மேல் இருந்து ஜி.பி.எஸ் மூலம் தூரத்தை கணிக்கும் குழுவினர்

கிரகணம் நிகழும் போது, கேமரா வைக்கும் தொலைவை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் தான். ஆனால், கடைசி நேரத்தில் இவற்றை எல்லாம் செய்து ஓர் அரிய நிகழ்வை எக்காரணம் கொண்டும், தவற விடுவதை கிரிப்ஸ் விரும்பவில்லை என்பதால், முன் கூட்டியே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தை கையில் எடுத்தனர். உச்சிக்கும், கேமராவுக்குமான இடைவெளியை ஜி.பி.எஸ் மூலம் அளக்க முடிவு செய்தனர். அதன்படி திட்டின் உச்சியின் ஜி.பி.எஸ் நிலை எண்ணை ( Co-Ordinates) கணித்து, அதில் இருந்து 300 மீட்டர் தொலைவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 300 மீட்டரில் இருந்து 1000 மீட்டருக்குள் இருந்து, 6.2 டிகிரி கோணத்தில், தான் தாங்கள் திட்டமிட்ட படத்தை எடுக்க முடியும் என்பது நிச்சயமாகிவிட்டது. இனி படம் எடுப்பது ஒன்று தான் ஒரே வேலை.

படம் எடுப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்
படம் எடுப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்

அற்புதமான நாளுக்காக, அந்த பாலைவனத்திலேயே டெண்ட் அடித்து தங்கியது புகைப்படக் குழு.

விடிந்ததும், சூரியன் உதித்தது. ஒட்டகமும் அதன் மேய்ப்பரும் மணல் திட்டின் உச்சியில் தயாராக இருக்கின்றனர். விடிந்து சிறிது நேரத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா கடக்கத் தொடங்கியது.

இறுதி புகைப்படம்
இறுதி புகைப்படம்

திட்டின் உச்சியில் நிகழ்ந்து கொண்டிருந்த காட்சி கட்சிதமாக படம்பிடிக்கப்பட்டது. வியப்பில் ஆழ்த்தும் அந்த படம் இன்று உலக வைரல்.

banner

Related Stories

Related Stories