வைரல்

520 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை - ஒரு உயிரைக் காப்பாற்ற பல தாய்மார்கள் போராடிய நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

520 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை - ஒரு உயிரைக் காப்பாற்ற பல தாய்மார்கள் போராடிய நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

லைக்ஸ், ஷேர், கமென்ட்ஸ் இதுவே ஃபேஸ்புக்கின் அடையாளம். ஆனால், இதையும்தாண்டி சமூக வளைத்தளத்தைப் பயனுள்ளதாக மாற்றுபவர்களையும் நாம் அடையாளம் கண்டுதான் வருகிறோம். வெள்ளத்தில், புயலில் சிக்கிய மக்களுக்கு ஃபேஸ்புக் கை கொடுத்ததை நாம் பார்த்திருப்போம். இன்று, பச்சிளம் குழந்தையின் அத்தியாவசிய தேவையான தாய்ப்பாலுக்கும் கைக்கொடுக்கிறது என்பது தான் வியக்க வைக்கும் செய்தி.

சமீபத்தில் நடந்த சம்பவம் இது. குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அப்படி இருக்க, கீதா மற்றும் அறிவழகன் தம்பதியர், கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து வந்திருக்கின்றனர். தனியார் கருத்தரிப்பு மையத்தை நாடிய பின், சிகிச்சை பலனளித்து இரட்டை குழந்தையாக கருவுற்றிருக்கிறது. மற்ற கர்ப்பிணிகளைப் போல கீதாவுக்கும் ஒரு கனவுலகம் இருந்தது, தாயாகிவிட்டோம் என்று. ஸ்கேனில்கூட இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாகவே இருந்தனர். ஆனால், கீதாவின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை என்பதுதான் வருத்தம்.

செக் அப் முடிந்து வீட்டுக்கு வந்த உடனே அவருக்கு வயிறு வலித்திருக்கிறது. ரத்தப்போக்கு ஏற்படுவதுமாக இருந்திருக்கிறது. மருத்துவர்களிடம் சொல்ல, ‘ஒன்றும் இல்லை, நார்மல்தான்’ என்றிருக்கின்றனர்.

520 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை - ஒரு உயிரைக் காப்பாற்ற பல தாய்மார்கள் போராடிய நெகிழ்ச்சி சம்பவம்!

வயிறு வலி, ரத்தப்போக்கு, சிறுநீர் பிரச்சனை எனத் தொடர்ந்து தீவிரமாகத் தொல்லை கொடுக்க, அவர் வேறொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், உங்களின் இரு குழந்தைகளையும் காப்பாற்றுவது கடினம். ஆனால், தற்போது டெலிவரி செய்தாக வேண்டும். சிசேரியன் தேவையில்லை உங்களுக்கு நார்மல் டெலிவரியே ஆகும். முயற்சி செய்யுங்கள் என்றிருக்கின்றனர். ஆனால், கீதாவோ 5 மாதம் கர்ப்பிணி; குழந்தைகளுக்கு பாதி வளர்ச்சி மட்டுமே இருக்கும். அதற்குள் பிரசவமா என அதிர்ச்சியாகி இருக்கிறார் கீதா. இருந்த போதும் துணிவை வரவழைத்துக் கொண்டு மார்ச் 15-ம் தேதி இரவன்று, இரு குழந்தைகளையும் சுகப் பிரசவத்தில் பெற்றெடுத்தால் பிறந்துள்ளனர். அதாவது குறை பிரசவத்தில்.

குறைபிரசவக் குழந்தைகளின் நிலையைப் பற்றித் தாயான கீதாவிடம் கேட்ட போது, “இரு குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்ததால், சிறப்புப் பிரிவில் வைத்து சிகிச்சை பார்க்க ஒரு நாளைக்கே லட்ச கணக்கில் செலவானதால் எங்களால் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாது என்றும், அப்படியே காப்பாற்றினால் குறைபாடு ஏதேணும் வரக்கூடும் என மருத்துவர்கள் சொன்னதால், 450 கிராம் கொண்ட இரண்டாவது குழந்தையை அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில் சேர்த்தோம். அன்றைய நாள் இரவே குழந்தை இறந்துவிட்டது” எனக்குரல் நடுங்க சொல்கிறார் கீதா.

இந்நிலையில் கீதாவுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி, வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானார். மருத்துவரும் தாய்ப்பால் வற்ற மருந்துகளைக் கொடுத்து நிறுத்தியுள்ளனர். அவரிடம் முதல் குழந்தை என்ன ஆனது, அதனில் நிலை என்ன எனக் கேட்ட போது, “முதல் குழந்தையாவது எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி மருத்துவர்களின் உதவியோடு இன்னொரு தனியார் மருத்துவமனையான ரெயின்போ குழந்தைகள்நல மருத்துவமனையை அணுகினோம். அவர்களும் 500 கிராமுக்கு குழந்தை இருந்தால், சிகிச்சை செய்து முயற்சி செய்து பார்க்கிறோம் எனச் சொன்னதால், எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்து உடனடியாக அந்த மருத்துவமனையில் முதல் குழந்தையை சேர்த்தோம்.” என்றார்.

520 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை - ஒரு உயிரைக் காப்பாற்ற பல தாய்மார்கள் போராடிய நெகிழ்ச்சி சம்பவம்!

பொதுவாக, குழந்தை 40வது வாரத்தில்தான் பிறக்கும். 38வது வாரத்தில் பிறந்தாலும் பிரச்சனை எதுவும் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை 25வது வாரத்துக்கு கீழ், பிறந்த குழந்தைகளை சிகிச்சை செய்து காப்பாற்றுவது மிக கடினம். மருத்துவ உலகில் 25 வாரத்துக்கு கீழ் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகம்தான். மேலும், கீதா விஷயத்தில் 22 வாரத்தில் பிறக்கின்ற குழந்தையை காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல என மருத்துவர்களும் சொல்லி இருக்கின்றனர்.

அப்படி இருக்கையில், 520 கிராமே கொண்ட அக்குழந்தைக்கு சிகிச்சை கொடுத்த மூன்று பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர்களில் ஒருவரான Dr.ஷோபனா அவர்களிடம் கேட்டபோது, “10 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்து, Endometriosis எனும் கர்ப்பப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குறைபிரசவ குழந்தைக்கு சிகிச்சை செய்தது மிகவும் சவாலாகவே இருந்தது. 90 நாட்கள் வரை ஏதோ ஒரு வகையில் சுவாசத்துக்கான சப்போர்ட் தேவைப்பட்டது. மிகவும் சிறு குழந்தை என்பதால் நரம்புகூட எங்களால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை, தலையில் உள்ள முடியை வழித்து, தலையில் உள்ள நரம்புகள் மூலம் சிகிச்சை அளித்தோம். வளர்ச்சி பெரிதும் இல்லாத இக்குழந்தையை காப்பாற்ற அதிக கவனத்தை செலுத்தினோம். கடைசி 10 நாட்கள்தான் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாகவே குழந்தை சுவாசிக்கும் அளவுக்கு முன்னேறியது . 108 நாட்கள் வரை குழந்தை மருத்துவமனையிலே இருந்தான்” என்றார்.

பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர எந்தப் பாலும் கொடுக்க முடியாது. ஏனெனில் செரிமானம் ஆகாது. அப்படி இருக்க தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போன கீதா எப்படி தன் குழந்தைக்கு பால் கொடுத்தார் எனக் கேட்டபோது, “ குழந்தையை அனுமதித்த 3-4 நாட்களிலே குழந்தைக்கு தாய்ப்பால் தேவை என மருத்துவர்கள் சொல்ல, எனக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருக்க, ஒரு குழந்தை தவறிவிட்டது இன்னொரு குழந்தையை எப்படியாவது காப்பாற்ற தாய்ப்பால் தேவை என ஃபேஸ்புக்கில் உதவி தேவை எனப் பதிவிட்டோம். அப்போது, Breastfeeding support group of India என்ற fb page மூலமாக உதவி கிடைத்தது. பதிவிட்ட சில நிமிடங்களிலே கிருத்திகா, ஜோஸ்ஃபின், பாக்யா போன்ற நிறைய தாய்மார்கள் தானாக முன்வந்து தாய்ப்பால் கொடுக்க சம்மதித்தனர். இதில் ஒரு சிக்கலும் எங்களுக்கு இருந்தது. குழந்தை பிறந்து 6மாதங்களே ஆன தாய்மார்களிடம் மட்டுமே தாய்ப்பால் வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அந்த நிலையில் இளம் தாய்மார்கள் தன் குழந்தைகளையும் சேர்த்து தூக்கி கொண்டு வந்து, என் குழந்தைக்காக தாய்ப்பால் கொடுக்க மருத்துவமனைக்கே வந்தனர். தொடர்ந்து 20 நாட்கள் வரை எல்லாம் சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தனர். சிலர் வேளச்சேரியில் இருந்து தினமும் வந்து தாய்ப்பால் கொடுத்து உதவினர். மேலும், பல மாணவர்கள் தன்னார்வலராக வந்து, தாய்மார்களை அழைத்து வந்து தாய்ப்பால் கொடுத்து உதவினர். அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் கலங்குகிறார் கீதா

அவரைத் தொடர்ந்து மருத்துவர் ஷோபனா கூறுகையில், “வெறும் 520 கிராமுள்ள குழந்தைக்கு, குடல் மிகவும் மெலிதாக இருந்ததால், தாய்ப்பால் மட்டுமே தேவையாக இருந்தது. பவுடர் பால், பசும்பால் குழந்தைக்கு கொடுக்க முடியாது. மீறி கொடுத்தால் செரிமானமாகாமல் பிரச்சனையாகிவிடும். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு தேவை எனக் கட்டாய சூழல் இருந்தது. முதலில் 12 மணி நேரத்துக்கு ½ ml, 1 ml எனத் தாய்ப்பால் கொடுக்க தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரித்தோம். தினமும் பல தாய்மார்கள் முன்வந்து தாய்ப்பால் கொடுத்துவிட்டு சென்றனர். குழந்தையின் உடல்நலம் முன்னேறியது. குழந்தை டிஸ்சார்ஜ் ஆன சமயத்தில் 2 மணி நேரத்துக்கு 25 ml தாய்ப்பால் குடிக்கும் அளவுக்கு குழந்தை தேறினான். சுமார் 1.54 கிலோ அளவுக்கு குழந்தையின் எடை அதிகரித்து இருந்தது.” என்றார். பல நூறு தாய்மார்களின் அன்பிலும் மெனக்கெடுதலிலும் மருத்துவர்களின் நேர்மையான முயற்சியிலும் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறான். மருத்துவர் ஷோபனா நம்மிடம் சொன்னது, நாங்கள் அனைவரும் இந்த குழந்தையை செல்லமாக அழைப்பது, ஜில்லு… ஏன்னா, He is so refreshing. அவனை பார்த்ததுமே எங்களுக்கும் refresh ஆயிடும்.” என்று ஜில்லு பற்றி பேசியதால் ஜில்லென்று மாறுகிறது மருத்துவரின் முகம்.

ஜில்லுவும் தாய் கீதாவும்
ஜில்லுவும் தாய் கீதாவும்

இன்று ஜில்லு எப்படி இருக்கிறார் தெரியுமா? தலை நின்றுவிட்டது. மற்ற குழந்தைகளை போல ஆரோக்கியமாக இருக்கிறான். சேட்டை செய்துகொண்டு முகம் பார்த்து சிரிக்கிறான்…!

banner

Related Stories

Related Stories