
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர் கடந்த 10ம் தேதி தனக்கான உணவை ஸொமேட்டோவில் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த உணவு மோசமான நிலையில் இருந்ததால், அதை டெலிவரி செய்த நபரிடம் திருப்பி அளித்துள்ளார்.
மேலும், அந்த நபரிடம் தன் பணம் திரும்ப வேண்டும் என விஷ்ணு வாதிட்டுள்ளார். அதற்கு அந்த நபர், கூகுளில் ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் எனத் தேடினால் வரும் எண்ணுக்கு அழைத்தால் அவர்களே உங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

அதன்படி கூகுள் தேடலில் தோன்றிய வாடிக்கையாளர் எண்ணுக்கு விஷ்ணு தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரத்தில், அவருக்கு ஸொமேட்டோவில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், 100 ரூபாய் பில் தொகையை திரும்பி வழங்குவதாகவும், ரீஃபண்ட் பெற 10 ரூபாய்க்கான பிராசஸிங் கட்டணத்தை தாங்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்து டெபாசிட் செய்யுமாறும் கூறியுள்ளார்.
10 ரூபாயை செலுத்திய பின் சிறிது நேரத்திற்குள் விஷ்ணுவின் வங்கிக்கணக்கில் இருந்து 77,000 திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய விஷ்ணு, சில நிமிடங்களில் நடந்ததை என்னால் தடுக்க முடியவில்லை. தற்போது காவல்நிலையம், வங்கி என பல இடங்களுக்கு அலைந்தபோதும் பணம் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.








