வைரல்

பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்ற நடைமேடையில் ஆட்டோவை இயக்கிய ஓட்டுநர் கைது ! (வீடியோ)

மகாராஷ்டிராவில் பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்ற ரயில் மேடையில் ஆட்டோவை இயக்கிய ஆட்டோ ஓட்டுநர் அம்மாநில போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்ற நடைமேடையில் ஆட்டோவை இயக்கிய ஓட்டுநர் கைது ! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் விரார் ரயில் நிலையம் வழியாக மும்பைக்கு 7 மாத கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் ரயிலில் பயணம் செய்துள்ளனர். மும்பையில் கனமழை பெய்து வருவதால் ரயில் தாமதமாகச் சென்றுள்ளது. ரயில் விரார் அருகே செல்லும்போது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். தவித்துப்போன கணவர் ரயில்வே அரசர உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரின் போன் அழைப்பை ரயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை. இந்நிலையில் ரயில் விரார் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

ரயில் நின்றதுமே கணவர் அங்குள்ள ரயில்வே அதிகாரியிடம் உதவி கேட்டுள்ளார். அதிகாரிகள் அங்கும் இங்குமாக அலைய விட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கணவர் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் சாகர் கம்லக்கர் கவாட் பெண்ணின் கணவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ரயில் நிலையத்திற்குள் ஆட்டோவை இயக்கியுள்ளார். கர்ப்பிணி பெண் இருக்கும் ரயில் பெட்டி வரை நடைமேடையில் ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளார். ஓட்டுநரின் கூச்சலும், ஹாரன் சத்தத்தையும் கேட்ட பொதுமக்கள் அச்சத்தில் விலகி வழிவிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு பத்திரமாக அருகில் உள்ள சஞ்சிவனி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரின் உதவிக்கு கணவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் ஊழியர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநரின் முயற்சியை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு வந்த மகாராஷ்டிரா போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சாகர் கம்லக்கர் கவாட்டை கைது செய்தனர். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆட்டோ ஓட்டுநர் நல்ல எண்ணத்தில் செயல்பட்டாலும், அவர் நடைமேடையில் வாகனம் ஓட்டியதால் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆட்டோவை இயக்கியது போக்குவரத்து விதிமிறல் ஆகும். விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரைக் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரை ஜாமினில் விடுவிக்க பெண்ணின் கணவர் அனைத்து முயற்சிகளும் எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்ற நடைமேடையில் ஆட்டொ ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories