வைரல்

துப்பாக்கி முனையில் வாகன சோதனை : அத்துமீறும் உத்தர பிரதேச போலீசார்! (வீடியோ)

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை போலீசார் துப்பாக்கி முனையில் நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி முனையில் வாகன சோதனை : அத்துமீறும் உத்தர பிரதேச போலீசார்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் பெரும் நகரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிக அதிக வேகத்தில் செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகளும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றன. சில நேரங்களில் வாகன சோதனையில் வாகன ஓட்டிகள் நிற்காமல் போவதால் அவர்கள் மீது ஆத்திரம் அடைந்து போலீசார் லத்தியால் தாக்குவதும், அவர்களை பிடித்து வழக்கும் போடுவதும் வழக்கமாகியுள்ளது. அதுமட்டுமின்றி போலீசார் லத்தியால் தாக்குவதால் விபத்து ஏற்பட்டு வாகனஓட்டிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகின்றது. சென்னை போன்ற நகரங்களில் வாகன ஓட்டிகளின் வாகனத்தையே பறிமுதல் செய்ய புதிய சட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் போலீசார் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளை துப்பாக்கி முனையில் நிறுத்தி அவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் பாடான் பகுதியில் வாகனச் சோதனைக்காக போலீசார் நிற்கின்றனர். அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு, போலீசார் துப்பாக்கிகளை அவர்களை நோக்கி நீட்டுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பயத்தில் வானத்தை நிறுத்துகின்றனர். அப்போது அவர்கள் கைகளை மேலேதூக்கச் சொல்லி போலீசார் மிரட்டி, சோதித்த பிறகு அவர்களை விடுவிக்கின்றனர்.

"தீவிரவாதிகளைப் போல எங்களை நடத்துகிறார்கள். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும்போது பொதுமக்களிடம் தீவிர சோதனை மேற்கொள்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது” என அந்தப் பகுதி வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "இந்த பகுதிகளில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் வரும் வாகனம் தெரியாததால் இப்படியாகச் சோதனை செய்யவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories