வைரல்

தங்கம், வைரம் இருந்தால் தொடக்கூடமாட்டானாம்: பணத்தை மட்டுமே கொள்ளையடிக்கும் ‘பலே’ திருடன்!

கொள்ளையடிக்கும் கடைகளில் விலை உயர்ந்த தங்க நகைகளோ, வைரங்களோ, விலை உயர்ந்த செல்போன்களோ இருந்தாலும் அவற்றை தொடக்கூடச் செய்யாத, பணத்தை மட்டுமே கொள்ளையடிக்கும் திருடன் பிடிபட்டான்.

தங்கம்,  வைரம் இருந்தால் தொடக்கூடமாட்டானாம்: பணத்தை மட்டுமே கொள்ளையடிக்கும் ‘பலே’ திருடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணாநகரில் சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையின் ஷட்டரை உடைத்து கடந்த 10 ம் தேதி கடையில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் பத்தாம் தேதி திருமங்கலம் அருகே சுமார் மூன்று கடைகளில் வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் தலைமையில தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை எடுத்து அண்ணாநகர் தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒரே ஒரு நபர் மட்டும் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஒவ்வொரு முறையும் கொள்ளை நடைபெற்ற பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அந்தக் கொள்ளையன் செல்வது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது பதிவாகியிருந்தது.

மேலும் கொள்ளையனை பிடிப்பதற்காக அதே மெட்ரோ ரயில் நிலையத்தில் அவன் வந்து செல்லும் நேரத்துக்கு முன்பாகவே மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர். அதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்கு அவன் மெட்ரோ ரயில் நிலையம் வந்தபோது தனிப்பிரிவு போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டபோது அரியலூர் மாவட்டம் பழமலைநாதபுரத்தைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது. சிவா திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக வேலை பார்த்துள்ளார்.

சிவா பிறவியிலிருந்தே வாய் பேச முடியாதவர். காலையிலிருந்து மாலை வரை ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து பின்னர் பணி முடிந்த பிறகு, இரவு நேரங்களில் கொள்ளையனாக பல இடங்களில் பல கடைகளின் ஷட்டர்களை உடைத்து பணத்தை மட்டுமே கொள்ளை அடித்துள்ளதாக தகவல் அண்ணாநகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது; அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை தான் இவர் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவார். இதற்காக சிவா கோயம்பேடு மெட்ரோ ரயிலில் ஏறி, திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் மெட்ரோ ரயில் மூலம் அவர் வேலை பார்க்கும் இடத்துக்கு சிசென்றுவிடுவார். இதற்காக மெட்ரோ ரயிலில் யாருக்கும் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மாதாந்திர பாஸ் வாங்கி கொள்ளையடித்துள்ளார்.

சிவா கொள்ளையடிக்கும் கடைகளில் விலை உயர்ந்த தங்க நகைகளோ, வைரங்களோ, விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தாலும் அவற்றை தொடக்கூடமாட்டான், பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பான் என்கின்றனர் தனிப்படை போலீசார்.

கொள்ளையடிக்கும் பணத்தை பெரிய வணிகவளாங்களுக்கு செல்வதும், அங்கு விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவது விலையுயர்ந்த உணவுகளைச் சாப்பிடுவது என செலவு செய்துள்ளார். மேலும் மேற்கண்ட இடங்களிலிருந்து தன்னுடைய செல்போனில் விதவிதமான ஆடைகள் அணிந்து செல்பி எடுத்து வைத்திருந்தாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிவா மீது பல திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு கடைசியாக சிறையில் இருந்து வெளியே வந்தவர், அதன் பின்னர் கடந்த 3 வருடங்களில் பல இடங்களில் இதே போன்று கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று எத்தனை கடைகளில் கொள்ளையடித்து இருக்கிறார் என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் அண்ணாநகர் காவல்துறையினர்.

banner

Related Stories

Related Stories