தமிழ்நாடு

குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்திய செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டதும், ரசனை குறைவானதுமாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே. சிவகுமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்ட நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி, தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் குழந்தைகளின் பங்கு குறித்து விவாதங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் குடும்பத்தினரின் அரசியல் விருப்பங்களில் செல்வாக்கு செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாகத் தமிழ்நாட்டில் குழந்தைகள் தெய்வத்தின் மறுவடிவமாகவும், முன்னோர்களின் மறுபிறவியாகவும் கருதப்படுவதால், அவர்களின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அவர்கள் பெற்றோரிடம் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக் கோருவது தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே இந்த விவகாரத்தில் எழும் முக்கியக் கேள்வி என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், குழந்தைகளிடம் செல்போன்கள் இல்லாததையும், அவர்களால் தாங்களாகவே காணொளிகளை உருவாக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு அரசியல் தலைவரின் வேண்டுகோளைக் காட்டி, அவர்களைச் செயல்பட வைத்து, காணொளிகளை உருவாக்கிப் பிரபலப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, குழந்தைகள் மட்டுமே முடிவெடுத்து இந்தச் செயல்களில் ஈடுபட்டதாகக் கருத முடியாது என்றும், பெரியவர்களை ஒரு கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிக்கச் சம்மதிக்க வைக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய செயல் ரசனை குறைவானது என்றும், அவர்களை வைத்து தேர்தல் பிரச்சாரக் காணொளிகளை உருவாக்கியது தரம் தாழ்ந்ததும் அரசியல் உள்நோக்கம் கொண்டதுமாகும் என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார்.

இத்தகைய செயல்களைத் தடை செய்வதா அல்லது தேர்தலை ரத்து செய்வதற்கான காரணமாகக் கருதுவதா என்பது குறித்து நாடாளுமன்றம் விரிவாகப் பரிசீலிக்க வேண்டிய விவகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் உண்மையானவை எனக் கருதினாலும், அரசியல் தேர்வை மாற்றியமைப்பதற்காகக் குடும்பப் பாசமும் உணர்ச்சிகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, பெரியவர்களின் முடிவெடுக்கும் சுதந்திரம் முடக்கப்பட்டதாகக் கூற முடியாது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories