தமிழ்நாடு

தேவையில்லாமல் பேசுகிறார்... : பேரவையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கண்டித்த எ.வ.வேலு!

தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர்களின் நலனுக்கு உறுதுணையாக இருக்கும்.

தேவையில்லாமல் பேசுகிறார்... : பேரவையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கண்டித்த எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சாம்சங் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் 12 மணி நேர வேலை மசோதா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு, தி.மு.க கொறடா எ.வ.வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார்.

அதில், "வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கும் வகையில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மதிப்பளித்து, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் அந்த மசோதா உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழிற்சங்கப் பிரச்சினையின்போது, அரசு முற்றிலும் நடுநிலையோடு செயல்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம், தொழிற்சாலை நிர்வாகத்தினரையும் தொழிலாளர்களையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்து பிரச்சினை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனால், தொழிற்சாலை மீண்டும் சீராக இயங்க வழிவகை செய்யப்பட்டது.தமிழகத்தில் உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் அவசியம். முதலீட்டாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் சாதகமான தொழில் சூழலையும் ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே அவர்கள் ஆந்திரா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழகத்தில் முதலீடு செய்வார்கள்.

தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர்களின் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டே செயல்படுகிறது" என்றார்.

மேலும் திட்டமிட்டு முதலாளித்துவம் என்று பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு, ”8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டால் வேலை செய்யலாம் என்ற அடிப்படையில்தான் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தோம். அப்போது தோழமைக் கட்சிகள் இந்த மசோதா வேண்டாம் என்று கூறின. உடனே நாங்கள் ரத்து செய்துவிட்டோம். இதில் முதலாளித்துவம் எங்கிருந்து வந்தது? த.வெ.க.வினர் தேவையில்லாமல் பேசுகிறார்கள். தொழிலாளர்களுக்கு என்றும் பாதுகாப்பான இயக்கம் தி.மு.க” எ.வ.வேலு கடும் பதிலடி கொடுத்தார்.

banner

Related Stories

Related Stories