
இடதுசாரிகளைக் குறிவைக்கும் த.வெ.க அரசைக் கண்டித்துத் தமிழ்நாடு முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம் "தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாகப் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளுமே காரணம்; அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ காரணம் இல்லை.
இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் அனைவரும் செயல்பட வேண்டும். இந்தச் சாசனம் எல்லா விதமான உரிமைகளையும் வழங்குகிறது; இது அனைவருக்குமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, ஜனநாயக ரீதியாகச் செயல்படும் ஒரு கட்சி. இப்படிப்பட்ட கட்சியை விசேஷமாக நீங்கள் கண்காணிக்க வேண்டும், அதன் போராட்டங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறி, கல்லூரி முதல்வர்களுக்கும், பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தலைமைச் செயலாளர் சாய்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது, 'தவறுதலாகச் சில வார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன' என்று கூறுகிறார். அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
குஜிலியம்பாறை விவகாரத்திலும் செங்கோட்டையன் பேசும்போது, 'சர்வே எடுப்பதற்காக அங்கு வட்டாட்சியரை அனுப்பினோம். ஆனால், அவர் இப்படிச் செய்துவிட்டார்; எனவே, அவரைத் திரும்பப் பெற்றுவிட்டோம்' என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் சொல்கிறார்.
வட்டாட்சியர் என்ன சர்வே எடுக்கச் சென்றார்? எங்களைச் சர்வே எடுக்கத்தான் அனுப்பினீர்களா? என்ன சர்வே என்று சொல்ல வேண்டும். வட்டாட்சியரை மாற்றியதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கும், மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் இருப்பதற்கும் முரண்பாடுகள் உள்ளன.'அவர் பயிற்சிக்காக வந்தார்' என மாவட்ட ஆட்சியர் சொல்கிறார்; 'சர்வே எடுப்பதற்காக வந்தார்' என அமைச்சர் சொல்கிறார்.
ஏன் உங்களுக்குள் இவ்வளவு பெரிய முரண்பாடு? உண்மைக்கு மாறான தகவல்களைச் சொன்னால் அது உரிமை மீறல் ஆகும். அமைச்சர் உண்மைக்கு மாறாகப் பேசினால் அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய விசாரணை நடத்தி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, மாவட்ட ஆட்சியரின் அறிக்கை குறித்தும் விசாரித்து, அவர் தவறான தகவலைக் கொடுத்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளே, அமைச்சர்களே... கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படியுங்கள். எங்களிடம் நூல்கள் இருக்கின்றன, படைப்பகம் இருக்கிறது; அங்கு எல்லா நூல்களும் உள்ளன, அவற்றைப் படியுங்கள். யாருக்கு உத்தரவு போடுகிறீர்கள்? உத்தரவை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
நீட்டிற்கு எதிரான போராட்டம் கடந்த 26ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், 28ஆம் தேதி தலைமைச் செயலாளர் அதைப்பற்றிக் கூட்டம் நடத்துகிறார். 'மாணவர்கள் கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது, அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்' என்கிறார். ஏன், பாஜகவின் மாணவர் அமைப்பு மட்டும் ஒழுக்கமான அமைப்பா? எங்கள் அமைப்பு மட்டும்தான் தடை செய்யப்பட்டதா? அரசியல் சாசன உரிமைப்படிதான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். அதை முறைப்படுத்த உங்களுக்கு உரிமை இருக்கிறதே தவிர, அதைத் தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!போராட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட எல்லா விதமான சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடுவது தமிழகக் காவல்துறைதான்; முதலில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள். அவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால், நாங்களே அவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறோம்.
அவ்வளவு விவரம் இல்லாத ஒருவரை ஏன் தலைமைச் செயலாளராக வைத்திருக்க வேண்டும்? அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குங்கள்! தகுதி வாய்ந்த ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளே தமிழகத்தில் இல்லையா? தகுதி வாய்ந்தவர்கள் தாராளமாக இருக்கிறார்கள்; கூடுதல் தலைமைச் செயலாளர்களாகவே 10 பேர் இருக்கிறார்கள். இவர்கள் வேண்டாம் என்றால் வேறு நபர்களைக் கூட அந்தப் பதவியில் அமர்த்தலாம். இவருக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? இவரை நீக்கிவிட்டு நிரந்தரமாக ஒருவரைத் தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும்!
எப்படி உயர்கல்வித்துறை அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதோ, அதுபோல இவரிடமும் விளக்கம் கேட்க வேண்டும். எனவே, உடனடியாகத் தலைமைச் செயலாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது தொடர்பாகத் முதலமைச்சர் விஜய் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும்.நாங்கள் தவெக (TVK) அரசு அமைய ஆதரவு கொடுத்தோம்; நாங்கள் கொடுத்த ஆதரவின் காரணமாகத்தான் இந்த அரசு நீடிக்கிறது!இந்த விஷயம் அந்தத் தலைமைச் செயலாளருக்கும், வட்டாட்சியருக்கும் தெரியாதா? உள்நோக்கத்தோடுதான் அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. அப்படிப்பட்ட அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்து அரசை நடத்தப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.






