
தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந் நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் த.வெ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான ரூ.2,500 உரிமைத்தொகை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பதில் அளிக்காமல் அமைதி காத்தார். அவருக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் ஆவேசமாகப் பேசினார். அதேபோல, பயிர்க்கடன் மற்றும் ரூ.2,500 உரிமைத்தொகை குறித்துத் துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் பேசாமல் முதலமைச்சரைப் பின்பற்றி மௌனம் காத்தனர்.
இதனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவை நேரலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறார் முதலமைச்சர் விஜய் என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்துள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதளப் பக்கத்தில்,”சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் மாதம் ரூ.2500, பயிர்க்கடன் முழு தள்ளுபடி ஆகியவை குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பிய நிலையில் - சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் என ஒருவர் கூட பதிலளிக்கவில்லை.
மேகதாது விவகாரத்திலும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்கள் பேசவில்லை.. இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், வாயைத் திறக்காமல் கம்முன்னு அமர்ந்துள்ளார். வெளியே வீராவேசமாக பேசும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இங்கே பம்மி, பதுங்குவது ஏன்?
“பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே” என்ற கமல்ஹாசன் அவர்களின் வசனம் தான் உங்களையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது..
நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை - மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய்." என தெரிவித்துள்ளது.






