தமிழ்நாடு

“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்வழியில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயின்ற தென்காசி இளைஞர் முத்துகுமார், சுவீடனின் முன்னணி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவிலேயே கல்விக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, சமூகநீதி மற்றும் கல்வி சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன்னோடி திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பள்ளிக்கல்வியை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பள்ளிச்சேர்க்கை விகிதம் அதிகரித்ததோடு, ஏழை மாணவர்களும் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் உருவானது.

அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை வழங்கினார். இந்த நடவடிக்கை தமிழ்மொழி பாதுகாப்பிலும் கல்வி வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியது.

பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில், அரசு பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. உயர்கல்வி நகர மையங்களில் மட்டுமே சிக்கிக் கொள்ளாமல் மாநிலம் முழுவதும் கல்லூரிகள் விரிவுபடுத்தப்பட்டன. மேலும், தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான உதவித்தொகைகள், இலவச சைக்கிள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்காக பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவிகளுக்கான “புதுமைப்பெண்” திட்டம், மாணவர்களுக்கான “தமிழ்ப்புதல்வன்” திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கல்விக்கு வழங்கி வரும் இந்த முக்கியத்துவத்தின் காரணமாகவே உலகளவில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் உயரிய பதவிகளில் சாதனை படைத்து வருகின்றனர். பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் என பல துறைகளில் தமிழர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்துகுமார் என்பவர், சுவீடனில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்: “தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ற சிறிய ஊரிலிருந்து சுவீடனில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறேன் என்பது நினைத்தாலே ஆச்சரியமாக உள்ளது.

தமிழ்வழியில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, அரசின் உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, கல்லூரி உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் மூலம் கல்வி கற்ற நான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன்.

என்னைப் போன்ற எளிய தமிழ் வழி மாணவர்களும் உயரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு. இந்த பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில்: “எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!” என பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories