
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறகிறது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கழக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, பொதுமக்களிடம் திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஒரு மாநில முதலமைச்சர், பயண டிக்கெட் எடுத்துக் கொண்டு எளிமையாக பயணம் செய்ததை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதுமைப் பெண் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதோது முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில் Morning ride in Chennai Metro என நெகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.
மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்..." என தெரிவித்துள்ளார்.
அதோடு, "மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! " என்றும் தெரிவித்துள்ளார்.






