தமிழ்நாடு

“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!

பா.ஜ.க. இடையூறாக இருந்தாலும் அதையும் மீறித் தமிழ்நாடு வளரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:-

1. எட்டாயிரம் ரூபாய்க்கான திட்டத்தில் இன்னும் மக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லை என்று எதிர்க்கட்சியினர் ஒரு கருத்தைச் சொல்கிறார்களே?

அந்த வாக்குறுதி பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டது. அதனாலேயே பலர் அவதூறு பரப்புகிறார்கள் என்று கருதுகிறேன். இலவச டிவி தருவோம் என்று கலைஞர் வாக்குறுதி கொடுத்த போதும் கூட ஏகப்பட்ட ஐயங்களை எழுப்பினார்கள். நடைமுறைப் படுத்திக் காட்டியது திமுக அரசு. அதேபோல், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரூ. 8000க்கான கூப்பன் திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவோம்.

2. ஐந்து ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் திருப்திகரமாக நிறைவு செய்திருப்பதாகக் கருதுகிறீர்களா? ‘தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம்’ என்று உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்த அளவுக்கு நம்பிக்கை எப்படி வந்தது?

எங்களின் ஒவ்வொரு திட்டமும் கடைக்கோடி மனிதரையும் சென்றடைந்துள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். “எங்கள் அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர்” என்று மகளிர் பெருமையுடன் சொல்கிறார்கள். தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை முடக்க பா.ஜ.க. நினைத்தது. மூன்று மாதத்துக்கான மூன்றாயிரம் ரூபாயும், கோடைக்கால நிதியாக இரண்டாயிரம் ரூபாயும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடிட 3 ஆயிரம் ரூபாயை 2.23 கோடி குடும்பங்களுக்கு வழங்கினோம்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் ஆகும். மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கிறார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இத்திட்டம் வழங்கி இருக்கிறது. 19.34 லட்சம் பள்ளிக் குழந்தைகள் தினமும் வயிறாரக் காலை உணவு உண்கிறார்கள். 48 லட்சம் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தால் பயிற்சி பெற்றுள்ளார்கள். 10 லட்சம் மாணவ, மாணவியர் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

4.57 லட்சம் மனுக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்வு கண்டோம். 18.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்க்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது 22 ஆண்டுகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 லட்சம் பேருக்குப் புதிய இலவச மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாகப் பணிபுரிய தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. 2.14 கோடி பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயன்பெற்றுள்ளார்கள். 34 லட்சம் பேரின் புகார்களைச் சரிசெய்துள்ளது மின்னகம். 17 லட்சம் பேருக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. 59,616 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகள் மூலமாகக் கடனுதவி பெற்றுள்ளார்கள். 1 லட்சம் பேருக்குக் கலைஞர் கனவு இல்லம் வீடுகள் தரப்பட்டுள்ளது. 9 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் தரப்பட்டுள்ளது. 72 லட்சம் பேருக்கு இணைய வழிப் பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தரப்பட்டுள்ளது. 13 லட்சம் பேருக்குப் பொது நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. 21 லட்சம் பேரின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் தரப்படுகிறது. 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எண்ணற்ற திட்டங்கள் மூலம் மக்களைச் சென்றடைந்திருப்பதால் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

3. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனக் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் செயல்பாடுகள் தி.மு.க.வுக்குச் சங்கடங்களை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். புதுச்சேரியிலும் பல உரசல்கள். பரப்புரைக் களத்தை இந்த அதிருப்திகள் பாதிக்கும் சூழல் உள்ளதா?

இல்லவே இல்லை. எங்கள் கூட்டணி எண்ணிக்கையால் ஆனது அல்ல; எண்ணங்களால் ஆனது என்று சொல்லி இருக்கிறேன். பல புதிய கட்சிகள் சேர்ந்துள்ளதால் அனைவருக்கும் பங்கிட்டுத் தர காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இதில் யாருக்கும் எந்தச் சங்கடமும் ஏற்படவில்லை. இது பரப்புரைக் களத்தைப் பாதிக்காது. இருதரப்பும் கையெழுத்து போட்டதும், தேர்தல் வேலைக்குள் போய்விட்டோமே தவிர, இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திக்கவில்லை.

4. கூட்டணி கட்சிகளை ‘உதயசூரியன்‘; சின்னத்தில் நிற்கச் சொல்லி அழுத்தம் கொடுப்பது ஜனநாயகம் அல்ல என்று கூட்டணியில் உள்ள தலைவர்கள் வருத்தப்படுகிறார்களே?

அப்படி யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாகத் தேர்தலில் சின்னம் வலிமையான இடத்தைப் பெறுகிறது. செல்வாக்கான, வலிமையான சின்னமான உதயசூரியனைப் பலரும் கேட்டு வாங்கினார்கள் என்பதே உண்மை.

5. மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தி.மு.க.-வில் உடனுக்குடன் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் பரம்பரையாக தி.மு.க.வில் பயணிப்பவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்ற கருத்தை கவனிக்கிறீர்களா?

அப்படி இல்லை. 234 தொகுதிகளில் 165 தொகுதிகளில் தான் தி.மு.க. போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்குள் தான் வாய்ப்புகளை வழங்க முடியும். வந்தவர்கள், இருப்பவர்கள் என்று பார்ப்பது இல்லை. தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம்.

6. இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டுமென மணிசங்கர் அய்யர் சொன்னதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? அப்படியொரு கோரிக்கை வலுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

என் உயரம் எனக்குத் தெரியும் என்று எங்கள் தலைவர் கலைஞர் சொன்னது தான் எனது பதில். மற்றபடி இந்தியா கூட்டணி வலிமை பெற அனைத்தும் செய்வேன்.

7. மக்கள் இலவசங்களை விரும்பவில்லை, வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்று நீங்களே நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தீர்கள், ஆனால், தற்போது மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் என இலவசங்கள் வாரி வழங்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறதே?

மகளிர் உரிமைத் தொகை என்பது இலவசம் அல்ல. உரிமைத் தொகை என்று தான் சொல்லி இருக்கிறோம். அது பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் அளிக்கிறது. விடியல் பயணம், பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இரண்டுமே பெண் அதிகாரம், மகளிர் விடுதலை ஆகியவை தொடர்புடையது. எனவே இலவசம் என்று சொல்ல முடியாது. பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர, விடியல் பயணம் காரணமாக அமைந்துள்ளது.

8. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவருதல் மிக நீண்ட போராட்டமாகும். அதனை பல்வேறு மாநில அரசுகள், அகிலஇந்தியக் கட்சிகளோடு கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தின் மூலமாகச் செயல்படுத்திக் காட்ட முனைவோம்.

9. தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவதாக அரசு கூறுகிறது. ஆனால், படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிசெய்வதற்கு நீங்கள் வைத்துள்ள திட்டம் என்ன?

அதிக முதலீடுகளைக் கொண்டு வருவதும், புதிய புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் ஒரு நிறுவனம் சார்ந்த வளர்ச்சி மட்டுமல்ல. அதன்மூலமாக அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காகத்தான் தொழில் துறை முதலீடுகளை அதிகமாக ஈர்த்து வருகிறோம். "நான் முதல்வன்”; திட்டமானது அனைத்து வகையிலும் மாணவர்களை அனைத்துத் தகுதி உள்ளவர்களாகவும் மாற்றி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 வயது முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பைப்பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் வெற்றி நிச்சயம் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பயிற்சித் தொகையினை அரசே முழுவதும் ஏற்கிறது. தொலைதூர மாவட்டங்களிலிருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும். 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

10. தமிழகத்தில் மது, கஞ்சா, போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முதல்வராகவும், துறை அமைச்சராகவும்தேர்தல் களத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இவை அனைத்தும் உண்மைக்கு மாறான தகவல்கள். தி.மு.க. அரசு மீது களங்கம் ஏற்படுத்த இது போன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புகிறார்கள். கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பது பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் தான் என்பதற்குப் புள்ளிவிவரங்கள் அதிகம் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் உத்திரப்பிரதேசத்தில் தான் அதிகம். எனவே இதை எல்லாம் அங்கே போய் பேசச் சொல்லுங்கள்.

“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!

11. நிதிப் பகிர்வு போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுவதால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறதா? ஒன்றிய அரசுடன் இணக்கமாகச் சென்றால் தமிழ்நாடு வளர்ச்சியடையும் என்கிறாரே பா.ஜ.க.வின் தமிழிசை? பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்துவிட்டதா?

இல்லையே. அனைத்துச் சமூகக் குறியீடுகளிலும் தமிழ்நாடுதான் வளர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டி இருக்கிறது என்பதுதான்திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாகும். பா.ஜ.க. தயவு இல்லாமல் மட்டுமல்ல, பா.ஜ.க. இடையூறாக இருந்தாலும் அதையும் மீறித் தமிழ்நாடு வளரும்.

12. போர்ச்சூழலில் மக்கள் சந்திக்கும் சிரமங்களைச் சமாளிக்க முடியாமல் ஒன்றிய அரசு திணறுவதாகக் கருதுகிறீர்களா? காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, சிறு வியாபாரிகள் முடங்கியிருப்பது போன்றவை இந்தத் தேர்தலில் உங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறதா?

இதைப் பற்றியெல்லாம் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கவலை இல்லை. கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் விளக்கு ஏற்றுங்கள், மணியடியுங்கள், கை கழுவுங்கள் என்று சொல்லி கை கழுவியவர் தான் பிரதமர் மோடி. கொரோனா காலம் போல நினைத்துக் கொள்ளுங்கள்; என்று அவரே சொல்லி விட்டாரே!

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசிகள் எகிறுவது ஆகியவை பற்றி எல்லாம் பிரதமர் மோடிக்கு எந்தக் காலத்திலும் கவலை இருந்தது இல்லை. போர்ச் சூழலில் தான் இதுபோன்ற நெருக்கடிகள் இருக்கிறதா என்ன? எப்போதுமே இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பிரச்சினைகள் அல்ல. வகுப்புவாதம், மக்களைப் பிரிப்பது இவை மட்டும் தான் நோக்கம்.

13. மக்களுக்கான திட்டங்கள், கூட்டணிக் கணக்குகள், பரப்புரை வியூகம் போன்றவற்றால் தேர்தல் களம் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருப்பது போல் சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. மத்திய பா.ஜ.க. அரசின் மூலம் ஏதேனும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு களநிலவரம் திசை மாற வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறீர்களா?

அப்படி எதுவும் இனி நடக்காது என்று நினைக்கிறேன். பா.ஜ.க. அப்படி எந்த நெருக்கடி கொடுத்தாலும் சந்திப்போம்.

14. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு என்ன சிக்கல் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஒன்றியத்தில் பாராமுகம் காட்டினாலும், தமிழ்நாடு அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைஏன் உடனடியாகச் செய்யவில்லை?

சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் எடுக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948-ன்கீழ் ஒன்றிய அரசு தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். மாநில அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியாது. சமூக பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மட்டுமே எடுக்க முடியும். 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது. Survey என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது வேறு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வேறு. மாநில அரசுகள் சர்வே மட்டும் தான் எடு முடியும். ஒன்றிய அரசு தான் Census எடுக்க முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் மாநில அரசு மீது வருத்தப்படுவது நியாயமல்ல.

15. பகுத்தறிவு பேசும் தி.மு.க. ஆட்சியில் கோயில் திருப்பணிகள் இவ்வளவு தீவிரமாக நடப்பது ஆன்மீக அக்கறையா? அல்லது ; இந்துஎதிர்ப்பு; பிம்பத்தை மாற்றி, பா.ஜ.க.வின் மத அரசியலை எதிர்கொள்ளநீங்கள் கையாளும் உத்தியா? இது அனைவருக்குமான அரசு. அதில் பக்தர்களும் அடக்கம் தானே?

அனைத்துத் துறை வளர்ச்சி என்று சொன்னால், அதில் இந்துசமய அறநிலையத் துறையையும் சேர்த்துத் தானே வளர்க்க வேண்டும். அதைத் தான் செய்துள்ளோம். கோவில் பணிகளைச் செய்யாமல் போயிருந்தால், ஏன் கோவில்களை நீங்கள் கண்டுகொள்ளவில்லை? என்று தானே கேட்பீர்கள்? பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பா.ஜ.க.வுக்கும் கோவிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கோவில்கள் மீது உண்மையான அக்கறை கொண்டது பா.ஜ.க. என்றால், இத்தனை திருப்பணிகள் நடந்திருப்பதை அவர்கள் பாராட்டி இருக்க வேண்டாமா? அவர்களது நோக்கம் மதத்தை வைத்து அரசியல் செய்வது. நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்யத் திருப்பணிகள் செய்யவில்லை. பக்தர்கள் மனம் மகிழ்ந்தால் போதும் என்று எங்கள் கடமையைச் செய்கிறோம்.

16. அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க... இந்தத் தேர்தலில் உங்களின்பிரதான எதிரியாக யாரைப் பார்க்கிறீர்கள்?

பொதுவாக நான் யாரையும் எதிரியாகப் பார்க்கும் இயல்புகொண்டவன் அல்ல.

17. நீங்கள் பரப்புரைக்குச் செல்லும் இடங்களிலும், உதயநிதிசெல்லும் இடங்களிலும் பெரும் கூட்டம் காணப்படுகிறது. கூட்டத்தை வைத்து வெற்றி / தோல்வியை கலைஞர் கணித்துவிடுவார் என்பார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய உங்கள் கணிப்பு என்ன?

200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்பதுதான் என்னுடைய கணிப்பு.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    banner

    Related Stories

    Related Stories