
தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.
தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் மார்ச் 30 தொடங்கினார்.
நேற்று ஒரேநாளில் திருவண்ணாமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, தளி, ஓசூர், வேப்பனஹள்ளி ஆகிய 7 தொகுதி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பாளர் கவிதா தண்டபானியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து வாணியம்பாடி தொகுதி IUML வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் அவர்களை ஆதரித்து ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பின்னர் ஆம்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அ.செ.வில்வநாதனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” உங்கள் தொகுதிக்கு திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் உங்கள் வேட்பாளர் வில்வநாதனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்யூங்கள்.
ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு, திராவிட மாடல் அரசுதான். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பான ஒரே இயக்கம் தி.மு.க தான்.
எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்படாத அனுபவம் என்னுடைய அரசியல் அனுபவம்; எப்போதும் சங்கிகளைத் துணிச்சலுடன் எதிர்க்கும் அனுபவம் என்னுடைய அரசியல் அனுபவம்; சுயமரியாதையோடு மக்களுடன் களத்தில் இருப்பதே என்னுடைய அரசியல் அனுபவம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், மோடி, அமித்ஷா ஆகியோரின் கால்களில் விழுந்ததுதான் பழனிசாமியின் அரசியல் அனுபவம். கால்களை வாரிவிட்ட அனுபவமும் அவருக்கு உண்டு. அமித்ஷா வீட்டிலிருந்து முகத்தை மூடிக்கொண்டு காரில் வெளியே வந்த அரசியல் முதிர்ச்சிகொண்ட அனுபவவாதிதான் எடப்பாடி பழனிசாமி” என பேசினார்.






