
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. வாக்குப்பதிவு நாளின்போது தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எவ்வித தடையுமில்லாமல் உறுதி செய்யும் வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் வலியுற்த்தும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த விடுமுறையை உறுதி செய்துள்ளது.
இந்த உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, வாக்கு சதவீதத்தை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உங்கள் வாக்கு உங்கள் உரிமை’ என்ற அடிப்படையில், வேலைப்பளுவின் காரணமாக யாரும் வாக்களிப்பதை தவிர்த்துவிடக் கூடாது என்பதே இந்த விடுமுறை உத்தரவின் முக்கியமான நோக்கமாகும்.
வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று, தங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.






