தமிழ்நாடு

“எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும்” : பிரதமர் மோடியின் உரைக்கு மு.வீரபாண்டியன் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்கள் பிரதமரின் பித்தலாட்ட அரசியல் உரையை அடியோடு நிராகரிப்பார்கள்.

“எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும்” : பிரதமர் மோடியின் உரைக்கு மு.வீரபாண்டியன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை தகர்த்து வரும் பிரதமர் மோடி பொய்யுரைகளை தோரணமாக்கி, இரட்டை என்ஜின் தமிழ்நாட்டுக்கு தேவை என எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் என்பதை நிரூபித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் பிரதமரின் பித்தலாட்ட அரசியல் உரையை அடியோடு நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டுள்ள தமிழ்நாட்டில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரையை இன்று (23.01.2026) பிரதமர் மோடி மதுராந்தகத்தில் தொடக்கி வைத்துள்ளார்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சுண்டு விரலையும் அசைக்காத இந்து மகா சபையும் ஆர்எஸ்எஸும், தேச விடுதலைப் போராட்டத்துக்கு துரோகமிழைத்து, தியாக சீலர்களை காட்டிக் கொடுத்த பிழைப்புவாதிகள் என்பதை மக்கள் மறந்துவிட்டதாக கருதிக் கொண்டு பிரதமர், தேச விடுதலை போராட்டத்தில் எரி நட்சத்திரமாக திகழ்ந்த நேதாஜியின் தியாக ஒளி வட்டத்தை அபகரித்து கொள்ளும் வகையில் பேச்சை தொடங்கினார்.

தேர்தல் பத்திரம் என்ற புதிய திட்டம் வகுத்து பல்லாயிரம் கோடி ரூபாயை வாரிச் சுருட்டிக் கொண்ட பாஜகவின் பெருந்தொகை ஊழலை நாட்டின் உச்ச நீதிமன்றம் கண்டித்தது. தேர்தல் பத்திரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியது.

குஜராத் மாநிலத்தின் பாஜகவின் தலைவர் ஆதரவோடு, வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் முறைகேடு செய்து, அவரது மகன் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்தற்காக கைது செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவும், அவரது தோழியின் குடும்பத்தினரும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் புரிந்த குற்றசாட்டில் தண்டிக்கப்பட்டவர்கள். பெருந்தொகை அபராதம் கட்டியவர்கள். அந்த ஊழல் கும்பலின் காலில் விழுந்து, ஆட்சியை, கட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பலகோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டர் அன்புமணி போன்ற ஊழல் முடைநாற்றம் வீசும் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு கரப்ஷன், மாஃபியா, கிரைம் என பேசுவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை ஒரு துளியும் இல்லை என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

தமிழ்நாட்டுக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சட்டபூர்வ நிதி பகிர்வையும் வழங்காமல் 11 ஆண்டுகளாக வஞ்சித்து வருவதையும் யாரும் மறந்து விடவில்லை.

சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவி வரும் தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்களை உருவாக்கி, மதத்தின் பெயரில் மக்களை அணிதிரட்ட முயற்சிக்கும் பாஜகவின் சூழ்ச்சிகளை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.

குறிஞ்சி நில கடவுளாக கருதப்பெறும் “முருகன் பெயரில் மாநாடு, வேல் யாத்திரை தொடங்கி, இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சினை வரையும் அனைத்திலும் மக்கள் இந்து முன்னணியையும், பாஜகவும் புறக்கணித்துள்ளனர்.

சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாஜகவும், வகுப்புவாத சக்திகளும் தமிழ்நாட்டுக்கு எதிராக, ஒன்றிய அரசின் அதிகாரத்தின் துணையோடு, ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வந்த அரசியல் சதிகளை எதிர் கொண்டு, தமிழ்நாடு மாநிலம் 11 சதவீதம் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது.

நாட்டில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட முதல் மாநிலம் தமிழ்நாடு என்பதை அறிந்து கொள்ள முடியாத பிரதமர், மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைத்து, மருத்துவர்களை உருவாக்கி வரும் தமிழ் நாட்டிற்கு ஊக்கம் தர மறுத்து, நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர், இளைஞர்களின் கனவுகளை தகர்த்து வரும் மோடி பொய்யுரைகளை தோரணமாக்கி, இரட்டை என்ஜின் தமிழ்நாட்டுக்கு தேவை என எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் என்பதை நிருபித்துள்ளார்.

வேலை வாய்ப்பு கேட்டு வீட்டுக்கு வந்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குற்றவாளியை பிணையில் விடுதலை செய்து மகிழும் பாஜக ஆட்சியின் பிரதமர், பெண்களின் உரிமை பற்றி பேசுவது வெட்கக்கேடானது.

சமூக நீதி ஜனநாயகம் காக்க, சமதர்ம கொள்கை வழி நின்று, அரசியலமைப்பு சட்டத்தின் படி, மாநில உரிமைகளை பாதுகாக்க, கூட்டாட்சி கோட்பாடுகளை உயர்த்தி பிடித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் பிரதமரின் பித்தலாட்ட அரசியல் உரையை அடியோடு நிராகரிப்பார்கள் என்பதை காலம் உணர்த்தும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories