
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குவது மரபு. அதன்படி இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது. அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல், அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த சட்டப்பேரவை அவமதிப்பு நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆட்சியின்மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்வதற்காகவே ஆளுநர் மாளிகையை போட்டி அரசின் தலைமையிடமாகப் பயன்படுத்துவது சரியானது தானா?
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.இரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார். அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். இரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மாண்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதித்த செயலாகக் கருதி அதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அரசமைப்புச் சட்ட பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியை வகிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. அவரைப் போன்றவர்கள் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கும் எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
ஒன்றிய அரசை காப்பாற்றும் முயற்சியில் தரம் தாழ்ந்த, மலிவான அரசியலில் ஈடுபடும் ஆர்.என்.ரவி, ஒரு வினாடியும் ஆளுநர் மாளிகையில் இருக்க தகுதியற்றவர். அவரது வன்ம அரசியலை களத்தில் தமிழக மக்கள் முற்றாக முறியடிப்பார்கள்.
அமைதியும், நல்லிணக்க சூழலும் நிலவி வரும் தமிழ்நாட்டில் மோதல் அரசியலுக்கு விதை தூவும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும்.








