
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து பல்வேறு இன்னல்களை இடையூறுகளை செய்து வருகிறது. குறிப்பாக நிதி கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. இதில் முதன்மையாக தமிழ்நாட்டையே பாஜக குறிவைத்து பல்வேறு இன்னல்களை மாநில அரசுக்கு கொடுத்து வருகிறது.
அதோடு ஆளுநர்களை வைத்து மேலும் இடையூறுகளை பாஜக ஏற்படுத்தி வருகிறது. அதே போல் ஆளுநர்களும் தங்கள் கடமைகளை மறந்து, பாஜகவின் ஊதுகுழலாக இயங்கி வருகிறது. குறிப்பாக மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து நீதிமன்றம் வரை குட்டு வாங்கியுள்ளது.

எனினும் ஆளுநர்கள் பாஜகவின் பிரசார ஊழியர்களாகவும், பாஜகவின் சித்தாந்தத்தையும் பரப்பும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரம்பத்தில் இருந்தே மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், தமிழ்நாடு அரசு குறித்து ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பொதுவெளியிலும் பேசி வருகிறார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் குவித்தாலும் திருந்துவதுபோல் தெரியவில்லை. இந்த சூழலில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது ஆளுநர், தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஆளுநர் ரவி இதுபோல் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல.

* 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் ஆளுநர் உரையுடன் தொடங்கும் இந்த பேரவைக்கூட்டத்தொடரில், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஆளுநர் முதல்முறையாக தனது உரையை முழுவதுமாக வாசித்தார்.
* அதன்பிறகு 2023-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இருந்த பெரியார், சுயமரியாதை, அம்பேத்கர், மகளிர் முன்னேற்றம், கலைஞர் ஆகிய வார்த்தைகளை வாசிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பதிலடி கொடுக்க, பேரவை முடியும் முன்பே எழுந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
* இதைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில், "தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாட வேண்டும்" என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல், அமர்ந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்க, ஆளுநரும் வெளியேறினார்.
* பின்னர் 2025-ம் ஆண்டு, கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
* Last but not Least இந்த ஆண்டும் (2026) சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் ரவி, தனது உரையை வாசிக்காமல் அதே காரணத்தை கூறி வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர் ரவியின் இந்த தொடர் செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.






