
தமிழரின் வீர விளையாட்டாக அறியப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் பல்வேறு பிரச்சினைகளை கடந்து தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை மக்களும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையிலுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி மிக விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜன 15-ம் தேதியும், பாலமேடு பகுதியில் ஜன.16-ம் தேதியும், இன்று (ஜன.17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 1,100 காளைகள் பங்கேற்ற நிலையில், 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இன்று காலை சுமார் 7 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்த இந்த போட்டியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் கண்டு ரசித்தார்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு, பணி அமர்த்திட வழிவகை செய்யப்படும் என்றும், அலங்காநல்லூர் பகுதியில், சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் 2 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கும், கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக்கும் இடையே இறுதி வரை ஆட்டம் இழுபறியாக இருந்தது. யார் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசை பெறுவார் என்று பலரும் எதிர்பார்புடன் இருந்தனர்.
இறுதியில் 19 காளைகளை காளைகளை அடக்கி மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். அதேபோல் 12 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 2-ம் இடமும், 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 3-ம் இடமும் பிடித்தனர்.

இதையடுத்து முதலாம் இடத்தை பிடித்த கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு, முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புடைய கற் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தருக்கு பைக் வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் இடத்தை பிடித்த மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டு, துணை முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை மக்கள் ஆரவாரமாக கண்டு ரசித்தனர்.






