
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (11.1.2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2026 விழாவில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளஞ்சிறார், சிறார், இளையோருக்கு இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் ஆகியப் போட்டிகளில் வெற்றிபெற்ற 15 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயலகத் தமிழர் தின விழா மலரை வெளியிட அதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக, ரூபாய் பத்து இலட்சம் மதிப்பிலான இசை கருவிகளை மொரிஷியஸ் நாட்டிற்கு வழங்குவதற்கு சான்றாக ஒரு வீணையினை துணை முதலமைச்சர் அவர்கள், மொரிஷியஸ் நாட்டின் பிரதிநிதி மலையப்பன், (Honorary Consul of Mauritius in Chennai) அவர்களிடம் வழங்கினார்.
முன்னதாக அயலகத் தமிழர் தினம் – 2026 விழாவினையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.
இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக நடக்கின்ற இந்த அயலகத்தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகின்றேன். வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், பொங்கல் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் வலிமையாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில், இன்றைக்கு உலகின் பல நாடுகளில் வாழும் நீங்கள் தமிழ் உணர்வோடு, தமிழ்ப் பற்றோடு, தமிழ்நாட்டின் மீது இருக்கக்கூடிய பாசத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனைபேரும் வருகை தந்திருக்கின்றீர்கள்.

வெளிநாடுகளில் நீங்கள் பலவிதமான விழாக்களை கொண்டாடி இருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனால், அது எதுவுமே நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது. ஏன் என்றால், பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு, தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில், அயலகத் தமிழ் உறவுகள் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றது, என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என்னுடைய குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த நெகிழ்ச்சியை, அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.
முதலில் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கக்கூடிய, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அயலகத் தமிழர் தினத்தை நம்முடைய திராவிட மாடல் அரசின் ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். கடந்த 3 வருடங்களாக இந்த நிகழ்ச்சிக்கு தவறாமல் என்னை அழைத்துவிடுவார்கள். நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை தேர்வு செய்து, அந்த தலைப்பின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்தி இந்த தினத்தை நீங்கள் கொண்டாடி வருகின்றீர்கள்.
இந்த ஆண்டுக்கான தலைப்பு, 'தமிழால் இணைவோம்,
தரணியில் உயர்வோம்' என்று மிகச் சிறப்பான வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஏன் என்றால், தமிழ் மொழி நம் அனைவரையும் இணைக்கக் கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்து பார்க்காது, யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழி தான் நம்முடைய தாய்மொழி, தமிழ் மொழி.
தமிழ் என்கின்ற அடையாளத்துக்கு முன்னால், வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போட முடியாது. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டி நம் அனைவரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய் மொழி, தமிழ் மொழி. அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான், இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கின்றோம்.
ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது. அந்த வகையில், உலகெங்கும் வாழக் கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அந்த பணி என்பது மிக, மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக, மிக அவசியமானது. அதைவிட முக்கியம் அவர்களுடைய நலன்களை பாதுகாக்கின்ற அந்த பணி என்பது மிக, மிக முக்கியம்.
முன்னரெல்லாம், தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான்,
சின்ன, சின்ன வேலைகளை செய்வதற்காகதான் நிறைய பேர் வெளிநாடுகளுக்கு செல்வார்கள், அங்கே தங்கி இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு, தமிழ்நாட்டில் இருந்து Engineers, Doctors, ஆராய்ச்சியாளர்களாக பலர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கே தங்கி இருக்கின்றீர்கள்.
தொழிலாளிகளாக சென்ற காலத்தில், குடும்பத்தை இங்கே விட்டுட்டு தனியாக சென்று அங்கே இருப்பீர்கள். இப்போது, குடும்பத்தையும் அழைத்து சென்று அங்கேயே தங்குகின்ற அளவிற்கு பெரிய வேலைகளில் இன்றைக்கு அங்கேயே தங்கிவிடுகிறீர்கள். இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த ஒரு வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பேர் தான் நம்முடைய திராவிட மாடல்.

இப்படி குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் போது, தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்து தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள். இதில் இன்றைக்கு சுமார் 32 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள்.
இதன் மூலம் அயலகத் தமிழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இந்த வாரியம் உங்களுக்கு பல உதவிகள் செய்தாலும், அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அடையாள அட்டை (ID card) என்பது ஒரு மிகச் சிறந்த உதாரணம். இந்த அடையாள அட்டை என்பது உங்களுடைய தாய்வீட்டு அடையாளம்.
அந்த வகையில், உங்களுடைய நலன்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அயலகத் தமிழர் நலத்துறை இன்றைக்கு செயல்படுத்தி கொண்டிருக்கிறது. உக்ரேன், ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்த போது அங்கு இருந்த தமிழர்களை எல்லாம் பாதுகாப்பாக நம்முடைய துறைதான் பாதுகாத்து, பாதுகாப்பாக மீட்டு வந்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், சிக்கல் வந்தால், அதற்கு தீர்வு காண எல்லா உதவிகளையும் இந்த துறை உடனடியாக செய்து கொடுத்து இருக்கிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்கு இருக்கக்கூடிய அயலகத் தமிழர்களை உங்களையெல்லாம் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். அப்படி சந்திக்கும்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பல உயரங்களை அடைந்திருக்கக்கூடிய தமிழர்கள் நீங்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகின்ற வகையில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த வேண்டுகோளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உங்களிடத்தில் வைக்கின்றார்.
இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் வைத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக, உங்களுடைய முயற்சியின் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே நம்பர் ஒன் பொருளாதார வளர்ச்சியுள்ள மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு உயர்ந்து இருக்கின்றது. அந்த சாதனையில் உங்களுடைய பங்கு மிகப் பெரியது. நாம் அனைவரும் சேர்ந்து இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு நாம் எடுத்து கொண்டு போக வேண்டும்.

பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில், நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது. உங்களுடைய குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு தமிழ்நாட்டினுடைய அடையாளத்தை சொல்லித் தருவது மிக, மிக முக்கியம். அதற்காகத்தான் முதலமைச்சர் அவர்கள் 'வேர்களைத் தேடி' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
ஆண்டுதோறும் வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களுடைய அடுத்த தலைமுறை பிள்ளைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, நம்முடைய பண்பாட்டு சின்னங்களை, அடையாளங்களை எல்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். நம் ஊரில் இருக்கக்கூடிய பண்பாட்டுச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எல்லாம் அவர்கள் நேரடியாக பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும், ஒரு பரவசம் ஏற்படும். இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கின்ற இடம் தமிழ்நாடு என்ற அந்த நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு உங்களுடைய குழந்தைகளுக்கு நிச்சயம் ஏற்படும்.
இப்போது நம்முடைய அரசின் சார்பாக, 'உங்க கனவ சொல்லுங்க' என்ற ஒரு திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசின் திட்டங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், எதிர்காலத்தில் என்ன மாதிரி திட்டங்கள் வர வேண்டும் என்று மக்களுடைய கனவுகளை கேட்டு அறிகின்ற முயற்சி தான் இந்த ‘உங்க கனவ சொல்லங்க’ என்ற திட்டம்.
அதேபோல், அயலகத் தமிழர்களும் உங்களுடைய கனவுகளை, இந்த வாரியத்தின் பொறுப்பாளர்களிடம், அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் தீட்டி செயல்படுத்துவார்கள்.
உங்கள் அனைவரையும் சந்தித்து பேசியது மிக, மிக மகிழ்ச்சியாகவும், மன நிறைவையும் எனக்கு தந்திருக்கிறது. உங்களுடைய அடுத்தடுத்த பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். ‘தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’.
இங்கு வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த வெற்றியை தரும் என்ற நம்பிக்கையோடு, வந்திருக்கக்கூடிய அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.






