தமிழ்நாடு

“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திராவிட இயக்கக் கொள்கைளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எப்போதும் மனித நேயத்தை, அன்பை, சமத்துவத்தைதான் அடுத்தவர்களிடம் போதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நேற்று (18.12.2025) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்றிய உரை:-

S P C (Synod of Pentecostal churches) பெந்தகோஸ்த சபை சார்பில் மதுரை மாநகரத்தில் நடைபெறுகின்ற இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில், உங்கள் எல்லாருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். Merry Christmas to Everybody Hear! கிறிஸ்துமஸ் என்றாலே, வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள், கிருஸ்துமஸ் மரம், தோரணம் என்று அந்த இடமே கொண்டாட்டமாக இருக்கும். அப்படிதான் இன்றைக்கு, இந்த விழா நடக்குற இடமும் கொண்டாட்டமாக, மகிழ்ச்சியாக அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவரின் முகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும், அன்பும் ஒருசேர தெரிகிறது.

குறிப்பாக, இங்கே கூடி இருக்கிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் நீங்கள் என் மேல் காட்டுற பாசம் என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சராக மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக இந்த விழாவில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் – திராவிட இயக்கக் கொள்கைளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எப்போதும் மனித நேயத்தை, அன்பை, சமத்துவத்தைதான் அடுத்தவர்களிடம் போதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

உலகத்தின் எட்டு திசைகளிலும், எல்லா நாடுகளிலும் ஒருவருடைய பிறந்தநாள் இவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் என்பது, வெறும் கொண்டாடுறதுக்காக மட்டும் தானா? அதை விட முக்கியம், அவருடைய கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதும்தான். இயேசுவின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று, அவரின் எளிமை. அவர் பிறந்ததே ஒரு மாட்டுத் தொழுவத்தில்தான்.

மக்களுக்கான தலைவர்கள் எல்லாம் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை, தன் பிறப்பாலேயே உடைத்தவர்தான் இயேசு கிறிஸ்து அவர்கள்.

சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்களால் கூட, மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்று நிரூபித்துக் காட்டிய இயக்கம் திராவிட இயக்கம்.

அதற்கு எடுத்துக்காட்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என்று எந்த தலைவரை நீங்கள் பாத்தாலும் அவர்களெல்லாம் மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்பது சாதாரணமா எல்லாருக்கும் இருக்க வேண்டிய மனித குணம் என்று கிறிஸ்தவம் சொல்கிறது. அதைத்தான் திராவிட இயக்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இப்போது ஒன்றியத்தில் நாட்டை ஆள்கின்றவர்களுக்கு இரக்க உணர்வுக்கு பதிலாக, வெறுப்பு உணர்வுதான் அதிகமா இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் மேலும், தமிழ்நாட்டு மக்கள் மேலும் இருக்கிறது.

இயேசு பிறந்த காலகட்டதில், ஆட்சி செய்த ஒரு மன்னன். அந்த மன்னனுக்கு இரக்கமே கிடையாது. இயேசு பிறந்த செய்தியை அந்த மன்னனிடம் சொல்கிறார்கள். இந்த நாட்டில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது, அந்த குழந்தை எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கே வழிகாட்டியாவும், தலைவனாவும் உயரப்போகிறோன் என்று சொல்கிறார்கள்.

அதைக் கேட்ட மன்னன் மகிழ்ச்சி அடையாமல், பொறாமைப்பட்டான். எங்கே அந்த குழந்தையினால் தன்னுடைய ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும், ஆபத்து வந்துடுமோ என்று அந்த மன்னன் பயந்தான். உடனே, அந்த நாட்டில் பிறந்த, 2 வயதுக்கு உட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொலை செய்ய உத்தரவிட்டான். தன்னுடைய ஆட்சி, அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போகக் கூடியவனாக அந்த மன்னன் இருந்தான். அந்த மன்னனுக்கு இருந்த பயம் மாதிரி, இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சியாளர்களுக்கும் நம் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் ஒரு பயம் இருக்கிறது. எங்கே எல்லா மக்களும் ஒன்றாக சேர்ந்துவிடுவார்களோ, அதனால் தங்களுடைய அதிகாரம் பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

மதம், மொழி, சாதியின் பெயரால், வெறுப்புணர்வை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். இங்கு மதுரையில் உங்கள் முன்னிலையில் உறுதியாக சொல்கிறேன்.

அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டுக்குள் அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சி எந்தநாளும் வெற்றிப் பெறாது. அதை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். ஏனென்றால், தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமான மாநிலம்.

மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தி, அந்த கலவரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கிற பாசிஸ்ட்டுகளின் நினைப்பு நிச்சயம் தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும். நிச்சயம் மக்களே ஒன்று சேர்ந்து வீழ்த்துவார்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், அது ‘பகிர்ந்து கொடுக்க வேண்டும்’. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை மற்றவர்களுக்கு உடனடியாக பகிர்ந்து கொடுக்க வேண்டும். அந்த வழியில்தான், நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் ஒன்றிய அரசுக்கு பகிர்தல் என்றாலே அவர்களுக்கு பிடிக்காது. தமிழ்நாட்டில் இருந்து அதிக வரி வசூல் செய்கிறார்களே தவிர, அதை பகிர்ந்து கொடுக்கின்றார்களே என்று கேட்டீர்கள் என்றால், நிச்சயம் கிடையாது. மற்ற மாநிலங்களுக்கு அதிகமாகவும், தமிழ்நாட்டிற்கு குறைவாகவும் கொடுக்கிறார்கள். இருந்தாலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன தேவையோ அதை அறிந்து சரியாக செய்து வருகிறார். அதனால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்து விளங்குகின்ற மாநிலங்களில் நம்பர் 1 இடத்தில் நம் தமிழ்நாடு இடம் பெற்றிருக்கிறது.

பாசிஸ்ட்டுகள் எவ்வளவு கொடுமைகளை செய்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, மதச்சார்பின்மையை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, திராவிட மாடல் அரசாக இருந்தாலும் சரி, நிச்சயம் எந்த நேரத்திலும் காப்பாற்றும் என்ற உறுதியை இங்கே நான் உங்களிடம் அளிக்கிறேன்.

சிறுபான்மை மக்களுக்கும், கழகத்திற்குமான பந்தம் இன்றைக்கு நேற்று உருவான பந்தம் இல்லை. நமக்குள் இருக்கக்கூடிய உறவு கொள்கை உறவு. அதை யாராக இருந்தாலும் நிச்சயம் பிரிக்க முடியாது உறவு.

திராவிட முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ மக்களுக்கும், இஸ்லாமியர் உட்பட அனைத்து சிறுபான்மையினர் மக்களுக்கும் என்றைக்குமே ஒரு பாதுகாப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக, இந்த நான்கரை வருடங்களில் நம்முடைய அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செய்து கொடுக்கிறார். கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு, கடந்த நான்கரை வருடங்களில் மட்டும் மொத்தம் 7 கோடி ரூபாய் அளவுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரிகின்ற பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் தொகை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் இருந்தது. இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்.

வாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை, 20 ஆயிரமாக இருந்தது, உங்களுடைய கோரிக்கையை ஏற்று, இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் அதை 30 ஆயிரமாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்.

அதேமாதிரி வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கும் நிரந்தர அங்கீகாரம் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கிறித்துவ மக்கள் ஜெருசலேமிற்கு புனித பயணம் மேற்கொள்வதற்கு மானியமாக 37 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல, கன்னியாஸ்திரிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 3 கோடி மதிப்பீட்டில், 44 தேவாலயங்கள் இன்றைக்கு புனரமைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் கோரிக்கைள் எல்லாம் வைத்தார்கள், அந்த கோரிக்கை எல்லாம் ஒவ்வொன்றாக நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது.

இன்றைக்கு இந்த மேடையிலும் பல கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த நம்பிக்கையை நான் கொடுக்கிறேன். அடுத்த வருடம் இந்த கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு, உங்களையெல்லாம் தைரியமாக இதே கிறிஸ்துமஸ் விழாவில் சந்திப்பேன்.

“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இப்படி சிறுபான்மையினர் மக்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் பக்கபலமாக இருக்கும். நீங்களும் நம்முடைய அரசுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்பீர்கள் என்ற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்றைக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள நான் உங்களை சந்திக்க இங்கே வந்திருக்கிறேன். அதேமாதிரி, ரம்ஜான் வந்தால், நீங்களும் நானும் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து நம் வாழ்த்துகளை பரிமாறி கொள்வோம். தமிழர்கள் என்ற உணர்வோடு பொங்கல் விழாவையும் நாம் அத்தனைபேரும் சேர்ந்து ஒன்றாக கொண்டாடுவோம். இதுதான் தமிழ்நாடு.

இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய ஒற்றுமை. இந்த சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவைதான் நம்முடைய தமிழ்நாட்டின் அடையாளங்கள்.

ஆகவே, வந்திருக்கக்கூடிய கிறிஸ்துவ பெருமக்கள் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது, வெறுப்பு பிரசாரங்களை புறந்தள்ளி, பொய் பிரச்சாரங்களை தவிர்த்து, பிளவு வாதங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நம் தமிழ் மக்கள் நாம் அத்தனைபேரும் ஓரணியில் நாம் திரள வேண்டும்.

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் விரோத பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும், ஒரே நேரத்தில் வீழ்த்த, இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நாம் அத்தனைபேரும் இந்த நேரத்தில் அந்த உறுதியேற்போம் என்று கூறிக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories