தமிழ்நாடு

#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

MGNREGA திட்டத்துக்கு பழனிசாமி வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.

#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு, "விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி" என ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை 60:40 ஆக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.

அதாவது இந்த திட்டத்திற்கான நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

இப்படி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்த புதிய மசோதாவிற்கு, வழக்கம்போல் ஆதரவு குரல் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவரது மக்கள் விரோத செயலுக்கு, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்

மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் பழனிசாமி!

100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories