
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 கழக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் குறித்து கழக செய்தித் தொடர்புக்குழு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும், SIR திருத்தங்கள் குறித்து கழக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோவன் எம்.பி-யும் பேசினர்.
இதையடுத்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்புரையாற்றினார். பின்னர் சாதித்து காட்டும் இளைஞர் அணி எனும் தலைப்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உரையாற்றினார்.
பிறகு எழுச்சியுரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணியின் பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம்! அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார்! கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்! அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்! கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி!
முதலில், அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்தில் சேர்த்தார். அடுத்து, அவர்களை கொள்கை ரீதியாக ஸ்டாராங் ஆக்க வேண்டும் என்று பாசறைக் கூட்டங்கள் நடத்தினார்.
அடுத்து, நம்முடைய கொள்கைகளை இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரும் புரிந்துகொள்ள, புது பேச்சாளர்கள் அவசியம் என்று உணர்ந்து, ஃபர்ஸ்ட் செட்டில் இருநூறு பேரை உருவாக்கியிருக்கிறார்! அவர்களின் பேச்சையெல்லாம், கழக மேடைகளில் கேட்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
அடுத்து, இளைஞர்களான நீங்கள் இன்னும் ஷார்ப்பாக பேச ஸ்ட்ராங்காகக் களமாட, நிறைய புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று, முத்தமிழறிஞர் பதிப்பகம் தொடங்கினார். சரி, இதெல்லாம் செய்துவிட்டோம் என்று சும்மா இருக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்று, அறிவுத்திருவிழா நடத்துகிறார்! பல இடங்களில் நூலகம் ஆரம்பிக்கிறார். இதுதான், ஒரு பொலிட்டிஷியனுக்கான குவாலிட்டி!
சரி, உதயநிதி இவ்வளவும் செய்கிறார்… அப்படி என்றால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி கூட உதயநிதி இங்கே சொன்னார்.நம்முடைய லெகசியை, மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்! கழகத்தை வளர்க்கும் பணியில் கொள்கையை விதைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.






