
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இணையத்தின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மையில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் நடைமுறைகள் குறித்து மக்களவையில் முரசொலி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி/அவதூறு செய்யும் பயனர்கள்/சைபர் குற்றவாளிகளை எளிதாகக் கண்காணிக்க, தனியுரிமையை சமரசம் செய்யாமல் சமூக ஊடக கணக்குகளை ஆதார் அடிப்படையில் உருவாக்கும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?
ஆன்லைன் துன்புறுத்தலைத் தடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பை உறுதி செய்ய/பொறுப்பான/நேர்மறையான டிஜிட்டல் நடத்தையை ஊக்குவிக்க, சமூக ஊடக தளங்களுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
டெல்டா நெற்பயிர் விவசாயிகளின் நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன?
தமிழ்நாட்டில் அதிகப்படியான மழைப்பொழிவு காரணமாக நெல் பயிர்களில் அதிக ஈரப்பதத்திற்கு வழிவகுத்ததைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து சீரான கொள்முதல் செய்ய நெல்லுக்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பத வரம்பை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாலும், கூழ் தயாரிக்கும் தொழில்களின் தேவை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு PM-AASHA (விவசாயி வருமான பாதுகாப்புத் திட்டம்) இன் கீழ் சந்தை தலையீட்டுத் திட்டத்தை (MIS) செயல்படுத்தவும், இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரிக்கைக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?
உணவு பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குக
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பதில் உணவு பதப்படுத்தும் துறையின் திறன் குறித்து ஒன்றிய அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட உணவு பதப்படுத்தும் துறையில் பெண்கள், பட்டியல் வகுப்பினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), மற்றும் சிறுபான்மை சமூகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே பாலங்களை ஆய்வு செய்திடுக !
ரயில்வே துறையில் விபத்துக்களை முற்றிலுமாக குறைக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதா என ஆர். கிரிராஜன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ரயில்வே பாலங்களின் மொத்த எண்ணிக்கை என்ன? நாடு முழுவதும் உள்ள ரயில்வே பாலங்களில் நிலைத்தன்மை மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு தணிக்கைகளை நடத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.






