
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்,மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஒன்றிய அரசு மொத்தமாக கைவிட்டுவிட்டதா என மக்களவையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஒன்றிய அரசு வழங்கிய நிதியின் அளவு, JICA யிடமிருந்து நிதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள், மதுரையில் உள்ள AllMS கட்டுமானத்திற்காக இதுவரை செலவிடப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைய தேவைப்படும் காலம் எவ்வளவு எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
தற்கொலையிலிருந்து மாணவர்களை காக்க நடவடிக்கை என்ன?
நாட்டில் நிகழும் மொத்த தற்கொலைகளில் 7.6% பேர் மாணவர்கள் என்பதை குறிப்பிட்டு இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசின் செயல்திட்டம் என்ன என மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்ட மனநலத் திட்டத்தின்கீழ் (DMHP) சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன? செயலில் உள்ள மாணவர் மனநலத் திட்டங்கள்/கூறுகளை செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன? ஆலோசனை அமர்வுகள், பரிந்துரைகள் மற்றும் மாணவர் மனநலத்திற்கான வள ஒதுக்கீடு உட்பட DMHP இன் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? மாணவர் தற்கொலைகளைக் குறைப்பதில் DMHP இன் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட மதிப்பாய்வு அல்லது தணிக்கைகளின் விவரங்கள் மற்றும் அதன் முடிவுகள் என்ன என்று அவர் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவதுறையில் தனது பங்களிப்பை மறுக்கிறதா ஒன்றிய அரசு?
கடந்த மூன்று நிதியாண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகையின் விவரங்கள் குறித்து பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம் நிறைவுறாததை குறிப்பிட்டும் 2021 முதல் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு அளித்துள்ள நிதி குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.








