
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் ரேபிஸ் மரணங்கள் மற்றும் ரேபிஸினால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாய்க்கடிக்கு பிறகான சிகிச்சை வசதிகளை வலுப்படுத்தவும், ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ரேபிஸைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிப் பொருட்களுடன் ஏதேனும் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நேபாளத்தில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன?
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சி காரணமாக, அங்கு மருத்துவம் படிக்கும் பல இந்திய மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
நேபாளத்தில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களை இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படுவார்களா? இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு முடிப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அங்கன்வாடிகளை தொடக்கப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?
11 லட்சம் அங்கன்வாடி மையங்களை (AWCs) தொடக்கப் பள்ளிகளின் வளாகத்தில் இணைக்கும் திட்டம் குறித்து சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிட்டத்தட்ட 2.9 லட்சம் அங்கன்வாடிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் 9.16 லட்சம் 1 ஆம் வகுப்பு உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் அரசு எடுத்துள்ள முடிவின் தற்போதைய நிலை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.








