
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கான பதோ பர்தேஷ் வட்டி மானியத் திட்டம் 2022-23 முதல் நிறுத்தப்பட்டதை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரங்கள் பின்வருமாறு:
தொடக்கத்தில் இருந்து மாநில வாரியாக இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? பன்னாட்டு கல்வி கிடைப்பதில் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு உள்ள சிக்கல்கள் மற்றும் அவர்களின் கல்வி இடைநிறுத்தம் குறித்து அரசாங்கம் செய்துள்ள மதிப்பாய்வின் விவரங்கள் என்ன?
வெளிநாட்டில் உயர்கல்வி தேடும் சிறுபான்மை மாணவர்களை ஆதரிப்பதற்காக அரசாங்கம் முன்மொழிகின்ற மாற்றுத் திட்டம் என்ன? சிறுபான்மை இளைஞர்களுக்கு தொடர்ச்சியான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு என்ன?
சிறுபான்மையினர் நல ஆணையத்தில் காலியிடங்களை நிரப்ப தாமதம் ஏன்?
2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் (NCM) உள்ள காலியிடங்கள் அதிகமாக இருப்பதையும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் கால தாமதங்கள் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி அதற்கான காரணங்கள் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் SC/ST வாக்காளர்களை பெருமளவு பாதிக்கும் இந்தியாவின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பெறப்பட்ட புகார் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
சிறுபான்மையினர் மீதான SIR இன் தாக்கம் மதிப்பிடப்பட்டுள்ளதா? பிரச்சினையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள்? என்பது குறித்தும் பி. வில்சன் கேட்டுள்ளார்.
மதுரை, கோவைக்கு மெட்ரோ இரயில் புறக்கணிப்பு ஏன்?
மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கான தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்ததற்கான காரணங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முடிவை எட்டுவதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப, நிதி மற்றும் மக்கள் தொகை அளவுகோல்கள் என்ன? மதுரை மற்றும் கோயம்புத்தூரின் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை, நெரிசல் மற்றும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசு முன்மொழிகிறதா? இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல் மற்றும் நிதி பங்கீட்டு முறைகள் குறித்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
நேனோ உரங்களை ஊக்குவிக்க நடவடிக்கை என்ன?
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும், குறிப்பாக ஆரணி மக்களவைத் தொகுதியில் நேனோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேனோ உரங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன? நேனோ உரங்களை ஏற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி அல்லது ஆதரவு குறித்த விவரங்கள் என்ன? நேனோ உரங்கள் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) அளவு மற்றும் பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதிலும் அவற்றின் செயல்திறன் பற்றிய ஆய்வு முடிவுகள் என்ன? குறிப்பாக தமிழ்நாட்டின் விவசாய நிலப்பரப்பில், நிலையான விவசாயம் மற்றும் மண் ஆரோக்கியத்தில் நேனோ உரங்களின் தாக்கம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
தீர்ப்பாயங்களில் நிலுவலையிலுள்ள வழக்குகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை என்ன?
2020 முதல், NCLT, NCLAT, DRT, கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் NGTயில் நிலுவலையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தீர்த்து வைக்கப்பட்டவை குறித்த தகவல்களை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் திமுக பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தீர்ப்பாயங்களில் வழக்குகளைத் தீர்த்து வைக்கும் விகிதங்களில் அதிக நிலுவையில் உள்ள தொகை என்ன என்றும் மண்டல வாரியாக உள்ல வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை அவ்வப்போது குறைப்பதற்கும், செயல்திறன் மேம்பாடு மற்றும் சரியான நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்வதற்கும் ஒன்றிய அரசு வழங்கியிருக்கும் வழிமுறைகளும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் குறித்தும் அருண் நேரு எம்.பி கேட்டுள்ளார்.






