
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை (ONORC) திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் திமுக எம்.பிமலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைதிட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை என்ன? ONORC அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, மாநிலங்கள் முழுவதும் பொது விநியோக முறை (PDS) சலுகைகளை பெறக்கூடிய ரேஷன் அட்டை பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை என்ன?
நாடு முழுவதும் ONORC-ஐ செயல்படுத்துவதில் அரசு சந்திக்கும் தொழில்நுட்ப அல்லது நிர்வாக சவால்கள் என்ன? புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு உட்பட நகர்ப்புற ஏழைகளுக்கான ரேஷன் சலுகைகளை தடையின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? தகுதியுள்ள எந்தவொரு பயனாளியும் விலக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய, ONORC திட்டத்தைக் கண்காணிக்க, மதிப்பீடு செய்ய மற்றும் வலுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க கோரிக்கை!
தமிழ்நாட்டில், குறிப்பாக சூரிய மின்சக்தி உற்பத்திக்கு அதிக வாய்ப்புள்ள தர்மபுரி மாவட்டத்தில், புதிய சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க ஒன்றிய அரசிடம் உள்ள திட்டங்கள் குறித்து தருமபுரி திமுக எம். பி. ஆ.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி உதவியின் விவரங்கள் என்ன? தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் பிற சாத்தியமான மாவட்டங்களில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் மற்றும் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்களை அமைப்பதில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.






