தமிழ்நாடு

ரூ.38 கோடி : சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ரூ.38.85 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.38 கோடி : சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, 38 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கருணை அடிப்படையில் 50 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு தொன்மையான 9 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை பழுதுபார்பதற்காகவும் புனரமைப்பதற்காகவும் அரசு மானியத்திற்கான முதல் தவணை தொகையாக 4.45 கோடி ரூபாய்க்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989-ஆம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும், 2007 - ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக நீதி கொள்கைகளை நிறுவுவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

கன்னியாகுமரி மாவட்டம், வட்டவிளையில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூடம் மற்றும் கோணம் பகுதியில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள திறன்பயிற்சி நிலையக் கட்டடம்;

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில், 6 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;

என மொத்தம் 10 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

ரூ.38 கோடி : சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சேதுராப்பட்டியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 8 கோடியே 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 4 கோடியே 46 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல்லில் 150 மாணவியர் தங்கும் வசதியுடன், 9 கோடியே 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள 3 சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடங்கள்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 7 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாயில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 6 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;

நாகப்பட்டினத்தில் 50 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 26 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக்கான கூடுதல் கட்டடம்;

என மொத்தம் 38 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை பழுது பார்ப்பதற்காக மானியம்

தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு முதல் தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்ப்பதற்கும், புனரமைப்பதற்கும் மானியம் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு பெரிய பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ், தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை பழுதுபார்பதற்காகவும் புனரமைப்பதற்காகவும் அரசு மானியமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியின் மூலம் 9 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு மானியத்தில் முதல் தவணையாக 4.45 கோடி ரூபாய்க்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பணிபுரிந்து பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் 50 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதி சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்

banner

Related Stories

Related Stories