
தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று கழகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகள்- இளைஞர் அணியினர், உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
எனது 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் கழக உடன்பிறப்புகள், இளைஞர் அணி தோழர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதை அறிந்தேன்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் பிறந்தநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு நாளாகும். ஆனால், பகட்டான கொண்டாட்டங்களை நான் ஒருபோதும் விரும்புவது இல்லை. கொள்கைப் பணியும், மக்கள் பணியும் இணைந்த பிணைப்பாக பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருக்குமானால், அதுவே எனக்கு மனநிறைவு தரும்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை-எளியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு இளைஞர் அணி தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகள், நம் இயக்கக் கொள்கைகள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு, சிறிய அளவில் திட்டமிட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
இதில், தலைமைக் கழகப் பேச்சாளர்கள்- இளைஞர் அணி கண்டறிந்து தலைமை வசம் ஒப்படைத்துள்ள 200-க்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவரும் சூழலில், எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இளைஞர் அணி தோழர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள்.
பொதுமக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் எஸ்.ஐ.ஆர். (S.I.R) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பெயரிலான அநியாயத்தை எதிர்த்து, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் கழகம் சட்டப்போராட்டம் நடத்திவருகிறது. அதேவேளை, வாக்காளர் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கும் பணிகளில் பொதுமக்களுக்கு உதவியும் வருகிறது.
இந்தப் பணியில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக நிர்வாகிகளுடன் இளைஞர் அணி தோழர்களும் இணைந்து பணியாற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். சர்வாதிகார மேகம் நம் நாட்டை வேகமாகச் சூழ்ந்துவரும் நிலையில், அந்த மேகக் கூட்டத்தை ‘உதயசூரியன்' தான் கலைக்கும் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், நம் பணிகள் அமைந்திட வேண்டும்.
என்னை குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வரும் என் அன்புக்குரியவர்கள் பொன்னாடைகள், சால்வைகள், பரிசுகள், பூங்கொத்துகள் போன்றவற்றை தவிர்த்து, புத்தகங்கள், கருப்பு-சிவப்பு வேட்டிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களைக் கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
எனது அடுத்த பிறந்தநாளிலும் நம் கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்ற வெற்றிச் செய்தியை உறுதி செய்யும் வகையில், நீங்கள் பணியாற்றுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






