
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் பாடல் வரிகளில் 'வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்' என்ற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், 'வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்' என்ற பாடலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”வருங்காலத்தை தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய துணை முதலமைச்சரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழகத்திற்கான வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் நம்முடைய கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இளைய சமுதாயத்தை அழைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும், உரிமைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் நம்முடைய இளைஞர் அணி செயலாளர்.இளைய சமுதாயத்தினர் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அறிவு சார்ந்த கருத்துக்களை இளைய சமுதாயத்தினர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
பாசிச சக்திகளை வீழ்த்தி வேறு அறுப்போம் என கம்பீரமான வார்த்தைகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த மேடையில் எந்த கருத்தை பேச வேண்டும் என்ற அறிவை சார்ந்த இயக்கமாக நமது இயக்கம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.






