
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்து வருகிறது, திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடையை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியை மறுத்ததோடு,17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க அரசு நிராகரித்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகளை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட ரயில் நிலையம் எதிரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய கழக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட நெல் உற்பத்தி 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று தற்காலிக தளர்வு கோரியும் அதை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.” என கண்டித்துள்ளார்.
அதேபோல், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ”தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசின் கோரிக்கைக்கு பிறகும், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை அதிகரிக்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான அரசாக ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது” என விமர்சித்துள்ளார்.






