
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (24.11.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.11.81 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை நவீன பேருந்து நிலையம் :
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது 10.04.1967 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இப்பேருந்து நிலையத்தை புனரமைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தங்கசாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த 14.03.2024 அன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
சுமார் 1.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில், 26,346 சதுரடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய பல்பொருள் அங்காடி, 11 எண்ணிக்கையிலான கடைகள், அலுவலக அறை, மூத்த குடிமக்கள் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை;
பயண சீட்டுகள் வழங்கும் அறை, உணவகங்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான தங்குமிடங்கள், மின்தூக்கி வசதிகள், ஏடிஎம் வசதிகள், 3 தளவாடங்கள் கொண்ட 20 பேருந்துகள் நிற்கும் வசதி, பேருந்துகள் வழித்தட பதாகைகள், பயணிகள் இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிட வசதிகள் போன்ற அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.






