
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பெண்களை பாதுகாக்கும் அரசாக, திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என மாணவிகள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டடங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படும் பெண்கள் இப்போது தைரியமாக முன்வந்து புகார் கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறைமட்டுமே சொல்வார்கள். அரசை குறைசொல்ல எதுவும் இல்லாததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறைசொல்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.






